பைசாபாத்: அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு, கலவரத்தை தூண்டும் நபர்களை கண்டறிய உத்தரப்பிரதேச மாநிலத்தில் 16,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சைக்குரிய பிரச்னையின் உரிமை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 6 முதல் இந்த வழக்கின் விசாரணை தினமும் நடந்தது. இருதரப்பு வாதங்களும் கடந்த 16ம் தேதி முடிவடைந்தன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இப்போது இருக்கும் ரஞ்சன் கோகோய் வரும் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கால், உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அங்குள்ள பள்ளிகளில் ஏற்கனவே தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் தீர்ப்பு வெளியாக இருப்பதால், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் நபர்களை கண்டறிந்து தகவல் அளிக்க, 16,000 ஆயிரம் தன்னார்வலர்களை உத்தர பிரதேச அரசு நியமித்துள்ளது. இந்த நடவடிக்கையை அம்மாநில காவல்துறை எடுத்திருக்கிறது.

 

அதற்கான 4 வகையான பாதுகாப்பு திட்டங்களை வடிவமைத்து இருக்கிறது. 1,600 பகுதிகளில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவிடப்படும் என்பதால் அதனை கண்காணிக்கவும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இந்த வழக்கில் சுமுகத் தீர்வை ஏற்படுத்த 3 பேர் கொண்ட சமரசக்குழு நியமிக்கப்பட்டு இருந்தது. அந்த குழு கடந்த 16ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கை தாக்கல் செய்தது.