சென்னை

கஸ்ட் மாதம் இந்தியக் குடியரசுத்தலைவர் தமிழகம் வந்து சட்டசபையில் கருணாநிதி படத்தை திறந்து வைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் தமிழக முதல்வர் டில்லி சென்றபோது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த சந்தித்தார்.  சந்திப்பில் அவர் “சென்னை மாகாண சட்டப்பேரவை தொடங்கி 100 வருடங்களாக உள்ளது.  அதையொட்டி நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.  அந்த விழாவில் நீங்கள் பங்கேற்று சட்டப்பேரவையில் கருணாநிதி படத்தைத் திறந்து வைக்க வேண்டும்” என அழைப்பி விடுத்திருந்தார்.

மேலும் அவர் மதுரையில் அமைய உள்ள கருணாநிதி பெயரிலான நூலகத்துக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட பல பணிகளையும் தொடங்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.  இந்த விழாக்களுக்கான தேதி குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இதுவரை வெளியாகவில்லை.

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி மற்றும் பயிற்சி மையம் சார்பில் நடக்கும் கொடி ஏற்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் குடியரசுத் தலைவர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழகம் வந்து 3 நாட்கள் தங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் கருணாநிதி படத் திறப்பு உள்ளிட்ட விழாக்களும் நடக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.