டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னா இன்று பதவி ஏற்றார். அவருக்கு  குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு,  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட ஒய்வு பெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சிவ் கன்னா அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் இன்று காலை (நவம்பர்11ந்தேதி)  உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சஞ்சிவ்கன்னாவின் பதவி காலம் வெறும் மாதங்கள் மட்டுமே உள்ளது. அவர் 2025ம் ஆண்டு மே 13-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவார்.

வாழ்க்கைக் குறிப்பு:

 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா 1960-ஆம் ஆண்டு, மே 14-ஆம் தேதி பிறந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தாா். 2005-ஆம் ஆண்டு தில்லி உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவா், 2006-இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். கடந்த 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா். உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வு பெறும் வயது 65 ஆகும். வயது அடிப்படையில் டி.ஒய்.சந்திரசூட்டுக்கு அடுத்த மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னா, தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவராகவும் உள்ளாா்.