மதுரை: ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முறையாக நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். மகா சிவராத்திரியையொட்டி, மதுரை மீனாட்சியை தரிசிப்பதுடன், இரவு கோவை ஈஷாவில் நடைபெறும்  மகா சிவராத்திரி விழாவிலும் கலந்துகொள்கிறார். குடியரசு தலைவர்  வருகையையொட்டி, மதுரை, கோவையில் 5அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

குடியரசு தலைவர்  வருகையை முன்னிட்டு மதுரையில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவராக பதவி ஏற்றபிறகு, திரவுபதி முர்மு பர் முதன்முறையாக நாளை (18-ந் தேதி) தமிழகம் வருகிறார். மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இந்த யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு நாளை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவாரத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

இதற்காக ஜனாதிபதி, நாளை காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் காலை 11.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். பின்னர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் அவர், அங்கு சாமி தரிசனம் செய்கிறார்.  அங்கு, தரிசனத்தை முடித்து கொண்டு, மீண்டும் மதுரை விமான நிலையம் செல்லும் திரவுபதி முர்மு, அங்கிருந்து விமானம் மூலம் பிற்பகல் 3.10 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார்.

அங்கு அவருக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பை ஏற்று கொண்ட பின்னர் காரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கோவை ரேஸ்கோர்சில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன்பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தொண்டா முத்தூர் வழியாக காரில் ஈஷா யோகா மையத்திற்கு செல்கிறார். அங்கு ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தலைமையில் ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து இரவு மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார்.