சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவரது வருகையையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
குடியரசு தலைவர் இன்று சென்னையில் நடைபெறும் வங்கி நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், நாளை திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதுடன், ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் தரிசிக்க உள்ளார். இதையடுத்து அந்த பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இன்று காலை கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, அங்கிருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் இன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு, பகல் 11.40 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு பகல் 12.10 மணிக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் செல்கிறார். அங்கு நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன தின விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
பகல் 1.20 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு 1.35 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுக்கிறார்.
இதைத்தொடர்ந்த, நாளை (செப்.3) காலை 9.20 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையம் செல்கிறார். 9.35 மணிக்கு விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு 10.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் செல்கிறார்.
திருவாரூர் அடுத்த நீலக்குடி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரை நிகழ்த்துகிறார். பின்னர், திருவாரூரில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஸ்ரீரங்கம் செல்கிறார். அங்கு ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருச்சி விமான நிலையம் சென்று, விமானப்படை தனி விமானத்தில், டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, சென்னை பழைய விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், விமான நிலைய உயர் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், மத்திய உளவுத்துறை அதிகாரிகள், விஐபி பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை, திருச்சி விமான நிலையங்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உட்பட குடியரசுத் தலைவர் செல்லும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.