உதகை, திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் பயணமாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று தமிழகம் வந்தடைந்தார்.

கோவை, சூலூர் விமானப்படை விமான தளத்தில் வந்திறங்கிய குடியரசுத் தலைவரை தமிழக அமைச்சர் மெய்யநாதன் வரவேற்றார்.

கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடும் பனி மூட்டம் காரணமாக, சாலை மார்க்கமாக உதகைக்கு செல்கிறார்.

நவம்பர் 28ஆம் தேதி குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்போது அதிகாரிகள் மற்றும் பயிற்சி அதிகாரிகள் மத்தியில் குடியரசு தலைவர் உரையாற்றுகிறார். நவம்பர் 29ஆம் தேதி உதகை ராஜ்பவனில் பழங்குடியின மக்களைச் சந்தித்து பேசுகிறார்.

இதனை தொடர்ந்து நவம்பர் 30ஆம் தேதி திருவாரூர் செல்லும் குடியரசுத் தலைவர், அங்கு மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி நீலகிரி, திருவாரூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.