சென்னை: நாளை ( 16.05.16 – திங்கட் கிழமை) காலை துவங்க இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். .
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. மொத்தம் 65 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
பூத் சிலிப் கிடைக்காதவர்கள் எலக்ட்ரானிக் பூத் சிலிப்பை பயன்படுத்தலாம். 1950 க்கு தங்களின் வாக்காளர் அடையாள எண் அனுப்பினால் பூத் எண், பாகம், வரிசை எண் வரும்.
மேலும், 11 ஆவணங்களில் ஏதேனும் காண்பித்து வாக்களிக்கலாம்.
பூத் ஏஜன்ட்டுகள் அருகில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளராக இருக்க வேண்டும். மாலை மூன்று மணிக்கு மேல் வெளியே போக கூடாது. செல்போன் கொண்டு செல்லக்கூடாது.
அமைச்சர், எம்பி., பஞ்சாயத்து நிர்வாகிகள் பூத் ஏஜன்டாக இருக்க முடியாது.
பணப்பட்டுவாடா தொடர்பாக 101 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உளுந்தூர் பேட்டையில் தேர்தல் அலுவலர் மீது பணத்தை வீசியது தொடர்பாக பா.ம.க., வேட்பாளர் பாலு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.