சென்னை: அதானியுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லையென தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவில் சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தங்களை கைப்பற்ற அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் வழங்கியதாக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால், தமிழ்நாடு அரசும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் அதானிக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மறுத்து வருகிறது.

இந்த நிலையில், தேமுகதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டிய நிலையில் நெருப்பில்லாமல் புகையாது என்றும்,  அதானி குழுமத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.  ஆனால்,  ஊழல் புகாரை மறைத்தாலும் உண்மை நிலை என்ன? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவில் சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தங்களை கைப்பற்ற அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் வழங்கியதாக அமெரிக்கா வின் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அதானியை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளது. இதை வைத்து தேசிய அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அதானி குழுமத்தைச் சேர்ந்த கௌதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் இந்தியாவின் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தங்களை கைப்பற்ற சுமார் 256 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, சுமார் 2029 கோடி ரூபாய் அளவில் லஞ்சம் கொடுத்திருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 

2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு காலகட்டம் வரையில், மாநில மின்சார வாரியங்களின் ஒப்பந்தங்களை கைப்பற்றவே அதானி குழுமம் பெருந்தொகையை கைமாற்றியிருப்பதாக குற்றஞ்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதில், இந்தியாவின் ஒடிசா (நவீன் பட்நாயக் – பிஜூ ஜனதா தளம் ஆட்சிக்காலம்), தமிழ்நாடு (தற்போதை திமுக ஆட்சிக்காலம்), சத்தீஸ்கர் (காங்கிரஸ் ஆட்சிக்காலம்), ஜம்மு காஷ்மீர் (மத்திய அரசு ஆட்சிக்காலம்), ஆந்திரா பிரதேசம் (ஜெகன்மோகன் ரெட்டி – ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்காலம்) ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் வழங்கியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. 

இதில் ஆந்திராவில் மட்டும் 2.3 கிகாவாட் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தத்தை பெற ‘Foreign Official #1’ என வழக்கில் புனைப்பெயரில் குறிப்பிடப்பட்டுள்ள ஆந்திரா அதிகாரிக்கு மட்டும் 228 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகிறது. அதாவது மற்ற மாநிலங்களை விட ஆந்திராவுக்கே பெரிய தொகை கைமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சட்டவிரோத செயல்களை மறைத்து அமெரிக்க வங்கிகளிடம் இருந்தும், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து அதானி குழுமம் பில்லியன் கணக்கில் சூரியஒளி மின்சக்தி சார்ந்த திட்டத்திற்கு நிதி திரட்டியிருக்கிறது என அதானி குழுமம் மீது வழக்கு தொடுத்த வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். மேலும், அதானி குழுமம் லஞ்சம் கொடுத்து கைப்பற்றிய ஒப்பந்தங்களின் மூலம் 20 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.16 ஆயிரம் கோடி) அளவில் லாபம் ஈட்டவும் வாய்ப்பிருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

லஞ்சம் கொடுத்தது இந்திய அதிகாரிகளுக்கு என்றாலும், அமெரிக்க முதலீட்டாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்நாட்டின் சட்டப்படி வழக்கு அமெரிக்காவிலேயே விசாரிக்கப்படும் எனவும் தெரிகிறது.

இந்த வழக்கு தொடர்பாக, கடந்தாண்டு  அதானி உறவினர் சாகர் அதானியின் நியூயார்க் வீட்டில் அமெரிக்காவின் எஃப்பிஐ சோதனை செய்தது.

இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி, அதானியை பிரதமர் மோடி பாதுகாத்து வருவதாகவும், அதானியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். மேலும், இந்த விஷயத்தில் திமுக, காங்கிரஸ் மாநில அரசுகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதால், ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், அதானி குழுமத்திடம் தமிழ்நாடு அரசு ஏதும் கடந்த 3 ஆண்டுகளில் ஒப்பந்தம் போடவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  விளக்கம் அளித்துள்ளார். திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டிற்கான மின்தேவையை கருத்தில் கொண்டு ஒன்றிய மின்சாரத்துறையுடன் 1500 மொகா வாட் மின்சாரம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற ஒன்றிய அரசு நிறுவனத்துடன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின்சாரத் துறை எந்த விதத்திலும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. சமூக ஊடகங்களில் முற்றிலும் தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்வாரியத்தின் விரிவான விளக்கம்

அதைதொடர்ந்து, தமிழ்நாடு மின்வாரியமும் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில்,”ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியை பயன்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் அபராதம் செலுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் விதியின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் சூரிய ஒளி மினசாரத்தை வாங்க வேண்டியுள்ளது. அப்படி வாங்காத பட்சத்தில் பல்வேறு விதமான அழுத்தங்களை மாநில அரசுகளுக்கு, ஒன்றிய அரசு உருவாக்குகிறது.

இதன் அடிப்படையில், தமிழ்நாடு மின்சார வாரியம் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) என்ற ஒன்றிய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரையிலும் திமுக ஆட்சி அமைந்த பிறகு, அதாவது 2021ஆம் ஆண்டுக்கு பிறகு அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரம் தொடர்பாக எந்த நேரடித் தொடர்பிலும் இல்லை. Solar Energy Corporation Of India (SECI) என்ற ஒன்றிய அரசின் நிறுவனத்திடம்தான் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து சூரிய மின்சார கொள்முதலைச் செய்கிறது.

மின் கொள்முதலுக்கான விலையை SECI நிறுவனம்தான் நிர்ணயம் செய்கிறது. மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அந்த விலையை அங்கீகரிப்பதா, நிராகரிப்பதா என்பைத முடிவு செய்கிறது. அதிமுக ஆட்சியில் ஒரு யூனிட்டுக்கு 7.25 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் நேரடி ஒப்பந்தம் கையொப்பமிட்டது. ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் திமுக ஆட்சியில் திமுக அரசு அதானி நிறுவனத்துடன் எந்தவிதமான ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை.

திமுக ஆட்சியில் SECI நிறுவனத்துடன் மட்டுமே, அதுவும் ஒரு யூனிட்டுக்கு 2.61 ரூபாய் என தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. தற்போதைய மாநில அரசின் அனைத்துவிதமான வரவு செலவும் SECI நிறுவனத்துடன் மட்டுமே உள்ளது, தவிர எந்தவிதமான தனிப்பட்ட நிறுவனங்களுடனும் இல்லை.

தங்களின் மின் தேவைகளுக்காக மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கும் மாநில மின்வாரியங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அதானி நிறுவனத்திடமிருந்து பெற்று மின்சாரத்தை விற்கும் புரோக்கராக SECI செயல்பட்டது என அமெரிக்க நீதிமன்றம் குறிப்பிடுகிறது.

அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் வழங்கியது என்றால் எந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்பதைத்தான் விசாரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க நீதிமன்றம் கௌதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் கைது செய்யப்படும் வாய்ப்பு மிக மிக குறைவு. ஆனால், அவரது பங்குகள் சர்வதேச அளவில் பெரும் இழப்பை எதிர்கொள்ளும் என்று நம்பப்படுகிறது.