‘வேலைக்கு தகுதியற்ற சோம்பேறி’ என்ற மூத்த மருத்துவர்களின் கேலி பேசியதை அடுத்து மயக்கமருந்தை அதிகமாக எடுத்துக்கொண்ட கர்பிணி பயிற்சி மருத்துவர் உயிரிழந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பால சரஸ்வதி என்ற 27 வயது பயிற்சி மருத்துவர் 3 மாத கர்பமாக உள்ளார்.

மகளிர் மருத்துவ துறையில் (Gynecology) முதுநிலை பயிலும் இவரது ஆய்வு அறிக்கை ஏற்கப்படாமல் பலமுறை திருப்பி அனுப்பியதால் வருத்ததில் இருந்த இவரை அந்த பிரிவின் தலைமை மருத்துவர் மற்றும் பேராசியர் உட்பட மூன்று மூத்த பெண் மருத்துவர்கள் அவருக்கு ஓய்வு அளிக்காமல் தொடர்ந்து 16 மணி நேரம் வேலை வாங்கியுள்ளனர்.

கர்ப்பிணியான அவரது மருத்துவ விடுப்பு கோரிக்கையையும் ஏற்காமல் நிராகரித்ததை அடுத்து விரக்தியில் இருந்துள்ளார் பால சரஸ்வதி.

இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று தனது கணவருடன் மதிய உணவு அருந்த வெளியே சென்ற பால சரஸ்வதி தன்னை மூத்த மருத்துவர்கள் சக மற்றும் இளநிலை மருத்துவர்கள் முன் வேலைக்குத் தகுதியற்றவர், சோம்பேறி என்று தரக்குறைவாக பேசி அவமானப்படுத்துவதாகவும் கூறி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

அன்று மாலையே அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவமனைக்கு வர அவருக்கு அழைப்பு வந்ததை அடுத்து மருத்துவமனைக்குச் சென்று இரவு நீண்ட நேரம் கழித்து வீடு திரும்பியுள்ளார்.

மறுநாள் திங்களன்று அதிகாலை வீட்டின் பூஜையறையில் மயக்க நிலையில் இருந்த பால சரஸ்வதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அளவுக்கு அதிகமாக மயக்கமருந்து உட்கொண்டு தற்கொலை செய்துள்ளாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது கணவர் ஜெய்வர்தன் சௌத்ரி தனது மனைவி மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாகவும் இதுகுறித்து அவரது வாட்சப்பில் இருந்து அவரது தோழிக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மருத்துவர் பால சரஸ்வதியின் மரணத்தை அடுத்து காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் 50 பேருடன் அங்கு பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட துறை தலைவர் உள்ளிட்ட மூன்று பெண் மருத்துவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

3 மாத கர்பிணி பயிற்சி மருத்துவர் பணிச் சுமை மற்றும் அவமானம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.