சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த 8 மாதங்களில் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் டெங்கு வைரஸ் தொடர்பாக கொசுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 21.4% மாதிரிகளில் டெங்கு எதிர்ப்பு தன்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதன்மூலம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும், 43 சுகாதார யூனிட் மாவட்டங்களில், 1272 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்தாண்டு, 1887 கொசு திரவங்கள் ஆராயப்பட்டன. அவற்றில், 4.6% மாதிரிகள் எதிர்ப்புதன்மை உள்ளதாக இருந்தன.

ஒவ்வொரு திரவமும் குறைந்தபட்சம் 25 கொசுக்கள் உடையது. “அனைத்து மஞ்சள் காய்ச்சல் கொசுவும் டெங்கு வைரஸை கொண்டிருப்பது கிடையாது. அப்படி வைரஸை கொண்டிருக்கும் அனைத்துக் கொசுக்களும் நோயை பரப்பிடவும் முடியாது.

வைரஸை கொண்டிருக்கும் பெண் கொசு மட்டுமே மனிதனுக்குள் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. மேலும், அது மனிதனை மோசமாக நோயுறவும் செய்கிறது” என்று தெரிவித்தார் பொது சுகாதார இயக்குநர் டாக்டர்.குழந்தை சாமி.

“எனவே, டெங்கு வைரஸைக் கொண்டிருக்கும் மஞ்சள் காய்ச்சல் கொசுக்கள் எந்தெந்தப் பகுதிகளில் அதிகமாக இருக்கின்றன என்பதை முன்னதாகவே கண்டறிந்துவிட்டால், நம்மால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்” என்றும் அவர் கூறினார்.