சென்னை: நிவர் புயல் சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்பட்ட நிலையில், தமிழகஅரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இயற்கையின் கருணை காரணமாக, சென்னையும், சென்னை வாழ் மக்களும் பாதிப்புகளில் இருந்து தப்பி உள்ளனர். தொடர் மழையால் சாலைகளில் நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், சில இடங்களில்மரங்கள் மட்டுமே சாய்ந்துள்ளது. இதனால், சென்னையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை என்பது மகிழ்ச்சிக்குரியது.
கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது. பின்னர் தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தீவிர புயலாக மாறியது. இதைத்தொடர்ந்து, நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில், புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் இடையே கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், அதிகாலை ( நவம்பர் 26) 2.30 மணி வரை முழுவதும் கரையைக் கடந்தது. தற்போதும் தொடர்ந்து பலத்த காற்றுடன் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இருந்தாலும், நிவர் புயல் காரணமாக சென்னையில் எதிர்பார்த்த அளவிலான சேதம் தடுக்கப்பட்டு உள்ளது.
பல இடங்களில் முன்கூட்டியே மின்சாரம் நிறுத்தப்பட்டதும், சேதம் பெருமளவில் தடுக்கப்பட்டது. முன்னதாகவே மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதாலும், பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டதால், பொதுமக்களும் மழை பாதிப்பின்றி தங்களை பாதுகாத்துக்கொண்டனர்.
தமிழகஅரசின் பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி, மாநகர காவல்துறையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கை காரணமாக, சென்னை மக்கள் புயல் மழை பாதிப்பில் இருந்து பாதுக்கப்பட்டுள்ளர் என்பதில் சந்தேகமில்லை.
சென்னையில் பெய்து வந்த கனமழை மற்றும் பலத்த காற்றால், நேற்று ஒரே நாளில் 67 மரங்கள் அடியோடு விழுந்துள்ளதாகவும், அவரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளன. அவற்றையும் மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே பெரியமேடு சாலையில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளதால் வாகனங்கள் விரைவாகச் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டது. தேங்கிய மழைநீரில் மிதந்தபடி வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் கோபாலபுரம் பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டது. கருணாநிதியின் இல்லத்திற்குள்ளம் தண்ணீர் புகுந்தது. அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கனமழை காரணமாக, தண்டையார்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் நகரே குளம்போல காட்சி அளிக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதை அகற்றும்பணி நடைபெற்று வருகிறது.
திருவொற்றியூரில் ராஜாஜி நகர், சக்தி கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பின்னர், அங்கு வந்த மாநகராட்சி பணியாளர்கள், ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
காசிமேடு, ராயபுரம், வண்ணார்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளிலும் கனமழை பெய்தது. வியாசர்பாடி, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள்.
சென்னை ராயப்பேட்டை ஐஸ் ஹவுஸ் அருகே பிரதான சாலை, ஆறு போல காட்சியளிக்கிறது. சில இடங்களில், அரசின் எச்சரிக்கையையும் மீறி சென்ற வாகனங்கள் தண்ணீரில் சிக்கி பழுதாகி நிற்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் வடக்கு வாசல் அருகே சாலை முழுவதும் வெள்ள நீர் தேங்கி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் எழும்பூர் – சென்ட்ரல் இடையே போக்குவரத்து தடைபட்டது. கனமழையால் ஈ.வெ.ராமசாமி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தொடர் மழையால் வானகரம் பூச்சந்தை குட்டை போல் காட்சி அளிக்கிறது. இதனால் பூ வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வேளச்சேரியில் சாலைகள் மற்றும் தெருக்களில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீரில் கார்கள் பழுதடையாமல் தடுக்க, ரயில்வே மேம்பாலத்தின் மீது இருபுறமும் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராம் உள்பட பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு உள்ளன. வேளச்சேரி பேருந்து நிலையம்உள்பட பல பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால், மழைநீரை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தரைதளத்தில் இருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
தாம்பரம் அருகே உள்ள புறநகர் பகுதிகளிலும் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன. தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூரில் சுமார் 10ஆயிரம் குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. தரைத்தளம் வரை தண்ணீர் தேங்கியுள்ளதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அடிப்படை தேவைகளுக்குக் கூட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். இதற்கிடையே அதிகாரிகள் பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் முடிச்சூர் பகுதி 3 முறை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணமாக, தாம்பரம் அருகே பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. அங்குள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளை பூட்டிவிட்டு வெளியேறியதால், பல இடங்களில் பொதுமக்கள் வெள்ளப்பாதிப்பில் இருந்து தற்காலிகமாக தப்பினர்.
செங்கல்பட்டு அடுத்த ஊரப்பாக்கத்தில் உள்ள மகாவீரர் நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதி பள்ளமான பகுதி என்பதால், தண்ணீரை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில், அன்றாட தேவைக்கான தண்ணீர், பால், உணவு பொருட்கள் கூட வாங்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
வேநெய்வேலி என்எல்சியின் 3 திறந்தவெளி சுரங்கங்களிலும் மழை நீர் தேங்கி நிற்பதால், சேமிப்பில் உள்ள நிலக்கரியை வைத்து மின் உற்பத்தி நடைபெறுகிறது.ர்கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் வழிந்தோடுகிறது.லஇதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மட்டுமின்றி இயற்கையின் கருணை காரணமாக சென்னை மக்கள் நிவர் புயலின் பெரும் பாதிப்பில் இருந்து தற்காலிக தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.