புதுடெல்லி:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ள, தேர்தலுக்கு முந்தைய எதிர்கட்சிகளின் கூட்டணியை அமைப்போம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் நலனுக்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கின்றேன்.
பொதுவான திட்டத்துடன் எதிர்கட்சிகள் ஓரணியில் திரள்வோம். மாநில அளவிலான அரசியல் சூழல் சார்ந்து தேர்தலுக்கு முந்தைய எதிர்கட்சிகள் கூட்டணியில் கட்சிகள் சேரலாம்.
இது குறித்து பேச மீண்டும் பிப்ரவரி 26 மற்றம் 27 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் கூட இருக்கின்றோம். இதில் பொதுவான திட்டம் குறித்து விவாதிப்போம் என்றார்.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறும்போது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் கடந்த புதனன்று எதிர்கட்சிகளின் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்தது.
எந்த ஒரு கட்சியும் தனிப் பெரும்பான்மை பெற முடியாது என்பதால், எதிர்கட்சிகளின் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியே ஆட்சியை பிடிக்க உதவும் என்று மம்தா பானர்ஜி நினைக்கிறார் என்றனர்.