டில்லி
பாஜக ஒளிபரப்பு செய்து வரும் நமோ டிவியின் அனைத்து நிகழ்வுகளுக்கும் தேர்தல் ஆணையம் தனது முன் அனுமதியை பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.
பாஜகவினரால் நடத்தப்பட்டு வரும் நமோ டிவி பிரதமர் மோடியின் பேச்சுக்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட பாஜக நிகழ்வுகளின் பதிவுகளை ஒளிபரப்பி வருகிறது. தேர்தல் நேரத்தில் இந்த டிவி ஆரம்பிக்கப்பட்டதற்கு எதிர்கட்சிகள் புகார் அளித்தன. ஆனால் இந்த தொலைக்காட்சி ஏற்கனவே செய்யப்பட்ட பதிவுகளை விளம்பரமாக வெளியிடுவதாகவும் அதற்காக டிடிஎச் ஆபரேட்டர்களிடம் நேரத்தை குத்தகை எடுத்துள்ளதாகவும் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவித்தது.
நமோ டிவி ஒரு விளம்பர நிகழ்வு என அறிவிக்கப்பட்டதால் இந்த டிவியை குறித்த எந்த ஒரு விவரமோ இதை இயக்குவது யார் எனக் கூட தெரியாத நிலை ஏற்பட்டது. ஆகவே பாஜக தனது ஐடி செல் மூலம் நமோ டிவியை இயக்கி வருவதாக ஒப்புக் கொண்டது. அத்துடன் அது ஒரு செய்தி சேனல் அல்ல எனவும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் மட்டுமே அதில் ஒளிபரப்பப் படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதில் ஒளிபரப்பப்படும் நிகழ்வுகள் குறித்து தேர்தல் குழுவிடம் காங்கிரஸ் புகார் அளித்தது. அந்த புகாரில் நமோ டிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்வுகள் அனைத்தும் தேர்தல் தொடர்புள்ளதாகவும் பாஜகவுக்கு நமோ டிவி தேர்தல் விளம்பரம் செய்து வருவதாகவும் இது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறிய செயல் எனவும் காங்கிரஸ் தெரிவித்தது.
அதை ஒட்டி நமோ டிவியின் தலைமை அதிகாரிக்கு தேர்தல் ஆணையம், “தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி தேர்தல் மற்றும் அரசியல் குறித்த எந்த ஒரு பதிவும் வெளியிட ஆணையத்தின் முன் அனுமதி பெற வேண்டும். இந்த விதி நமோ டிவிக்கும் பொருந்தும். எனவே இனி ஒளிபரப்ப உள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும், ஏற்கனவே ஒளிபரப்பி மறு ஒளிபரப்பு செய்ய உள்ள பதிவுகளுக்கும் முன் அனுமதி பெற வேண்டும்” என தெரிவித்துள்ளது.