சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷாலின்  வேட்புமனு பரிசீலனையின்போது ஏற்பட்ட குளறுபடிகளால் தேர்தல் ஆணையராக இருந்த வேலுச்சாமி மீதும் புகார் கூறப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அரசியல் கட்சியினர் உள்பட சுயேச்சையாக டிடிவி தினகரன், நடிகர் விஷாஸ், தீபா உள்பட மொத்தம் 140க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் வேட்புமனு பரிசீலனையின்போது, நடிகர் விஷால் மனுவை திமுக, அதிமுக வேட்பாளர்களின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைத்தார்.

விஷால்  தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் உள்ள  பிரமாணப் பத்திரத்தில் பல விவகாரங்கள் தவறுதலாக கூறப்பட்டு உள்ளதாகவும், பல விஷயங்கள் மறைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினர்.

அவரது மனுவை முன்மொழிந்தவர் பெயர்,  ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் மாலையில், அவர் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.

இதையடுத்து நடிகர் விஷால் அதற்கான காரணம் கேட்டும், ஆதாரம் தாக்கல் செய்தும் ரோட்டில் அமர்ந்து பிரச்சினையை ஏற்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து, அவரது மனுவை மீண்டும் பரிசீலிப்பதாக அறிவித்த தேர்தல் அதிகாரி வேலுசாமி, பின்னர் நள்ளிரவில், அவரது மனுவை தள்ளுபடி செய்வதாக  அறிவித்தார்.

தேர்தல் அதிகாரியின் இந்த குளறுபடியான செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன. சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது. வழக்கு தொடரப் போவதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலர் வேலுசாமி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.