சென்னை: தவெக தலைவர் விஜய் உடன் ஆலோசனை நடத்திய பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் இன்று தவெகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம் என்றும், கூட்டணி கட்சிகளுக்கும் அதிகாரத்தில் பங்கு என்றும் அறிவித்து தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.  கடந்த ஆண்டு (2024)  பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கிய விஜய்,  2024 அக்டோபர் 27 அன்று விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி, கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  அவரது ஆட்சியாளர்கள் குறித்த விமர்சனப் பேச்சு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்து, அதற்கான பணிகளை தனது கட்சி நிர்வாகிகள் மூலம் மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் தேர்தல் வெற்றி தொடர்பாக ஒப்பந்தம் போட இருப்பதாக கூறப்படுகிறது. இதன் முன்னோட்டமாக, பிரசாந்த் கிஷோர் சென்னையில் முகாமிட்டு உள்ளார். அவர் நேற்று ( 10ந்தேதி) நடிகர் விஜயை அவரது பனையூர் வீட்டில் சந்தித்து பேசினார். சுமார் 3மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 11ந்தேதி)  தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் 2-ம் நாளாக விஜய் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்,  ஏற்கெனவே திமுகவின்  வெற்றிக்கு பங்காற்றியுள்ளார். மேலும் தேசிய அளவில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நிலையில், இந்த முறை தவெகவுக்கு பணியாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.