டில்லி:

இந்திய அரசியலமைப்பு ஜனநாயகம், உயர் கல்வி, தரமான கிராமப்புற வாழ்க்கை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் பிரனாப் முகர்ஜி அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோர் இந்த அறக்கட்டளையை தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் பிரனாப் முகர்ஜி பேசுகையில், ‘‘ எனது 13வது ஜனாதிபதி பதவி காலத்தில் தொடங்கப்பட்ட சில பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் நோக்கத்தோடு அறக்கட்டளை பணியாற்றும்.

எனது 5 ஆண்டுகால பதவி காலத்தில் 160க்கும் மேற்பட்ட மத்திய கல்வி நிறுவனங்களுக்கு சென்றேன். ஐஐடி, என்ஐடி, 768க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் என்ற வடிவமைப்பில் உயர்கல்வி உள்கட்டமைப்புகள் இருப்பதை பார்த்துள்ளேன். இதில் ஒரு சில தான் தரமான முறையில் உள்ளது ’’ என்றார்.

இந்த அறக்கட்டளை இயக்குனராக பிரனாப் முகர்ஜியின் ஜனாதிபதி கால செயலாளர் ஒமிதா பால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழாவில் ஒமிதா பால் பேசுகையில், ‘‘கிராமப் புற வாழ்க்கை தரத்தை உயர்த்தும் கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்பாற்றல்களை செயல்படுத்தப்படும்.

‘ஸ்மார்ட் கிராம்’ திட்டத்தின் கீழ் ஹரியானா மாநிலத்தில் 100 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசியலமைப்பு ஜனநாயகம், அமைதியை ஊக்குவித்தல், மத நல்லிணக்கம் ஆகியவற்றை பலப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்த அறக்கட்டளைக்கு பின்னால் இருந்து டாடா குழும தலைவர் ரத்தன் டாடா உதவி செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய அமைச்சர் சுரேஜ் பிரபு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பகுஜன் சமாஜ் கட்சி சதீஸ் மிஸ்ரா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இடதுசாரி தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.