மிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை.

வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.


தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில். இக்கோயில் தஞ்சைப் பெரிய கோயில். பெரிய கோயில், இராஜராஜேஸ்வரன் கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

முதலாம் இராசராச சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்கக் காலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160 அடியாகும். இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை – முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில், அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.

இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த (Axial) மண்டபங்களும், விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது.