அகமதாபாத்:
மின் மிகை மாநிலம் என்று மார்தட்டிக் கொண்ட குஜராத்தில், உலக வர்த்தக கண்காட்சிக்கு அதிக அளவு ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

காந்திநகரில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதியுடன் 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மைதானம் உலக வர்த்தக கண்காட்சிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் 15-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
உலக அளவிலான வர்த்தக கண்காட்சி ஜெனரேட்டர்கள் உதவியுடனேயே நடப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகை மின் மாநிலம் என்று கூறிக் கொள்ளும் குஜராத்தில் இப்படி ஒரு நிலைமையா? இது ஏன் என்று மின் நிறுனத்திடம் கேட்டபோது, ”உலக வர்த்தக கண்காட்சி நடக்கும் மைதானத்துக்கு வயர்கள் அமைத்துள்ளோம். இதற்கான பணத்தை அரசு தரவில்லை. எனவே, நாங்கள் மின் விநியோகம் செய்யவில்லை.
இந்த கண்காட்சி முடியும் வரை 500 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த தேவையை ஜெனரேட்டர்கள் மூலமே ஈடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
மின் வயர்களை அமைக்கவும், மின் விநியோகம் செய்யவும், பாதுகாப்பு டெபாஸிட் தொகையாக ரூ. 4.5 கோடி கேட்டோம். அரசு தர மறுத்துவிட்டது.
இந்த கண்காட்சியை கண்காணித்து வரும் குஜராத் மின்துறை அமைச்சர் சவுரப் படேல் கூறும்போது, “ஜெனரேட்டர் மூலம் மின் விநியோகம் செய்வதால் செலவு குறைவாக இருந்ததால், இத்தகைய முடிவு செய்தோம். இந்த பிரச்சினை பற்றி எனக்குத் தெரியாது. ஜெனரேட்டரைப் பயன்படுத்துவதால் என்ன பிரச்சினை? “என்று கேள்வி எழுப்பினார்.
மின் துறை நிபுணர் கே.கே.பஜாஜ் இது பற்றி கூறும்போது, “தனியார் மின் நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தைப் பெறுவதைவிட, ஜெனரேட்டர் பயன்படுத்துவதால் ஆகும் செலவு குறைவுதான். ஆனால், ஜெனரேட்டர் பயன்படுத்துவதால், ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படும்” என்றார்.
[youtube-feed feed=1]