சென்னை: திமுக ஆட்சி என்றாலே மின்தடை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று மின்சாரத்துறை மானியக்கோரிக்கை மீது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்க்கட்சிகள் மீது பாய்ந்த நிலையில், அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் பரவலாக மின்வெட்டு உள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ள கிராமப்பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இது சர்ச்சையாகி உள்ள நிலையில், கடந்த வாரம் 2 நாள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு நிலக்கரி பற்றாக் குறை என மத்தியஅரசு மீது மாநில அரசு பழிபோட்டது. ஆனால், மத்தியஅரசு ஒரு மாதத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறியது. இதில் மத்திய, மாநில அரசுகள் அரசியல் செய்து மக்களை முட்டாளாக்கி வருகின்றன.
இந்த நிலையில், இன்று தமிழ்நாடு சட்டசபையில் இன்று மின்சாரத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் மின்துறை அமைச்சரான அதிமுகவைச் சேர்ந்த தங்கமணி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தான் மின் வெட்டு அதிகரித்துள்ளது என்று குற்றம் சாட்டியதுடன், போதுமான அளவிற்கு நிலக்கரி கையிருப்பு வைத்து கொள்வதற்கு தமிழக அரசு தவறிவிட்டது. இது தமிழ்நாடு அரசின் தவறு. மாநில அரசின் நிர்வாக குறைபாடுகளால் தான் மின் வெட்டு நிலவி வருகிறது. மே மாதம் பொறுப்பேற்ற பின் மின் வெட்டு ஏற்பட்ட போது பராமரிப்பு காரணங்கள் என சொல்லப்பட்டது. அதன்பின் அணிலால் மின் வெட்டு என சொல்லப்பட்டது. இப்போது மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது. இந்த முறை நிலக்கரி பற்றாகுறை என சொல்கிறது என்று கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்க்கட்சிகள், திமுக ஆட்சி அமைந்தவுடன் மக்களிடையே மின்வெட்டு என்ற மாய தோற்றத்தை உருவாக்குகின்றனர். போதுமான அளவு நிலக்கரியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்குவதில்லை என்று கூறியதுடன், தமிழ்நாட்டுல 2 நாட்கள் மட்டுமே மின் வெட்டு இருந்தது. அந்த மின்வெட்டும் சரி செய்யப்பட்டுவிட்டது. இப்போது சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் மின்வெட்டு மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தவர், கடந்த அதிமுக ஆட்சியின்போது ஏற்பட்ட மின்வெட்டு குறித்த பட்டியை வாசித்தார்.
தொடர்ந்து பேசியவர், தமிழ்நாட்டில் இனி மின்வெட்டே இருக்காது என்றும் இருந்த மின்வெட்டும் சரி செய்யப்பட்டுவிட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்ததுடன், நீங்கள் இரவில் கனவு கண்டாலும், பகலில் கனவு கண்டாலும் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் கீழ் மின் வெட்டு கண்டிப்பாக இருக்காது என்று உறுதிப்பட கூறினார்.
இன்றைய சட்டப்பேரவை அமர்வல், எரிசக்தித்துறையின் சார்பில் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிலக்கரி கிடைக்கப் பெறாததாலும், மற்றும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அதிக விலை காரணமாகவும் 2021 ஆகஸ்ட், செப்டம்பர் & அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் பெரும் மின் பற்றாக்குறை ஏற்பட்டது.
பல நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் குறைந்த அளவு மின்சாரத்தை வழங்கி வந்ததுடன், மின் சந்தையிலும் மின் கொள்முதல் விலையானது மிகவும் அதிகமாக இருந்ததாகவும் , இருந்தாலும் அனைத்து நுகர்வோர்களுக்கும், நம்பகமான மின்சாரத்தை வழங்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து, தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் தங்கு தடையில்லாத மின்சாரத்தை வழங்கி வருகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் 20,000 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எரிசக்தித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.