சிவகங்கை
கொரோனாவை காட்டி தேர்தலை ஒத்தி வைப்பது ஜனநாயக படுகொலை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக அணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றாகும். தற்போது அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன் மாநிலம் எங்கும் பிரசாரம் செய்து வருகிறார்.
சிவகங்கையில் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழக அரசு மத்திய அரசுக்கு வெறும் அடிமையாக இல்லை, கொத்தடிமையாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பழனிசாமியாகத் தான் பேசுகிறாரே தவிர அவர் மனசாட்சியாகப் பேசவில்லை. முதல்வராக அவர் பேசுவது இதுவே கடைசி.
எடப்பாடி பழனிசாமி யார் மூலம் முதல்வரானார் என்பதை நினைத்துப், பேச வேண்டும். அப்போது கூவத்தூரில் என்ன நடந்தது என்பது அனைத்து மக்களுக்கும் தெரியும். முதல்வர் அதிமுகவினர் இஸ்லாமிய மக்களுக்கு இணக்கமானவர்கள் என்பது போல் பேசுகிறார். இஸ்லாமிய மக்களுக்கு எதிரான குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவளித்தது அதிமுக தான்.
தற்போது தமிழகத்தில் மிகப்பெரிய அலை உருவாகியுள்ளது. இது 10 ஆண்டுக்கால அதிமுக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் எதிரான அலை ஆகும். கருத்துக் கணிப்பு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உண்மையில் கருத்துக் கணிப்பில் வந்ததைவிட அதிக இடங்களில் எங்களது கூட்டணி வெற்றிபெறும்.
அனைத்துத் தொகுதிகளுக்கும் அதிமுக பணம் அனுப்பி வைத்துள்ளது. எனவே தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை ஒத்துவைத்தால், அது ஜனநாயகப் படுகொலை ஆகும். அதிமுக வேட்பாளர்கள் பலர் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்கின்றதைப் பார்த்து மக்கள் கேலி செய்கின்றனர்.
இன்னும் திராவிட, கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தேவை இன்னும் பூர்த்தி அடையவில்லை. ஆகவே அந்த இயக்கங்கள் தொடரும். இந்நிலையில் அந்த இயக்கங்கள் அழிந்துவிடும் என முதல்வர் கூறுவது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.
உண்மையில் தமிழக மக்கள் மோடியை விரும்பவில்லை. தமிழகத்தில் மோடி எந்த அளவிற்குப் பிரச்சாரம் செய்கிறாரோ, அந்த அளவிற்கு எங்களின் வெற்றி எண்ணிக்கை கூடும்,” எனத் தெரிவித்துள்ளார்.