சென்னை: தபால் வாக்குகள் குறித்து திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தபால்வாக்குகளை சிசிடிவி பொருத்திய அறையில்பாதுகாக்க வேண்டும் என்றும், தபால் வாக்குகளில் எந்த ஒரு குற்றச்சாட்டும் இடம் தராத வகையில் அவற்றை கண்காணிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு தொடர்ந்த வழக்கில், தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ள முதியோர், மாற்றுத் திறனாளிகளின் பட்டியலை வழங்கக் கோரி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மார்ச் 29ம் தேதி மாலை 6 மணிக்குள் பட்டியலை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் பட்டியலை வழங்ககாததால்,திமுக சார்பில் நேற்று உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று அவசர வழக்காக விசாரணை நடத்தப்பட்டது.
இதுதொடர்பான மனுக்கள் இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், பெரும்பாலான இடங்களில் தபால் வாக்காளர்களின் பட்டியலை தங்களுக்கு வழங்காமலே தபால் வாக்குகள் பெறப்பட்டு வருவதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவு முறையாக நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான ஜி.ராஜகோபாலன், மனுதாரர் கோரிக்கையை பரிசீலித்ததாகவும், பட்டியல் வழங்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு பிறகே தபால் வாக்குகளை பெற தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் திமுகவின் கோரிக்கையான தபால் வாக்குகள் பெறும் போது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது என்று தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, தபால் வாக்குகளில் முறைகேடு செய்ததாக எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் இடம் தராத வகையில், அவற்றை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய அறையில் பாதுகாக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். பின்னர், திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தபால் வாக்குகள் தொடர்பான இரு வழக்குகளையும் முடித்து வைத்தனர்.