சென்னை:

மிழக சட்டமன்றத்தில் இன்று நேற்று நடைபெற்ற தபால்துறை தேர்வு தொடர்பான விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றன. இந்த விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகளுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதன் காரணமாக அவையில் கூச்சல் குழப்பம் எற்பட்டது. தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக,  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர்.

நாடு முழுவதும் இந்தியை திணிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் மோடி அரச,  சமீபத்தில் புதிய கல்விக்கொள்கை என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அதனை மாற்றியமைத்தது பா.ஜ.க. ஆனால், தற்போது, வேலைவாய்ப்புக்கான  அரசு தேர்வுகளின் மூலம் இந்தியை புகுத்துவதை திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

நேற்று நாடு முழுவதும் நடைபெற்ற தபால்துறை பணிக்கான தேர்வு, ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டுமே நடைபெறும் என்றும், மாநில மொழிகளுக்கு இடமில்லை என்று அறிவித்தது. இது தமிழகத்தில் பிரளயத்தை ஏற்படுத்திய நிலையில், இன்றைய சட்டமன்ற விவாதத்தில் எதிரொலித்தது.

இன்று காலை சபை கூடியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. அதையடுத்து, தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடத்தப்பட்டது தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு பேசியது. அப்போது பேசிய திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு பாஜக ஆட்சிக்கு வந்த பின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு தபால் தேர்வில் மாற்றம் செய்துள்ள தாக குற்றம் சாட்டினார். மேலும், தென் மாநிலங்களை சேர்ந்தவர்களை மத்தியஅரசு பணியில் அமர்த்தக்கூடாது என்ற நோக்கில் மோடி அரசு செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

தபால் துறை தேர்வை தமிழில் நடத்த சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரி்ந்துகொண்டு அடுத்தகட்ட முடிவை எடுக்கலாம் என முதல்வர் கூறியிருப்பதாகவும், மத்தியஅரசின் அறிவிப்பை எதிர்த்து,  தீர்மானம் நிறைவேற்ற முடியாது என எந்த இடத்திலும் முதல்வர் கூறவில்லை என்று விளக்கினார்.

ஆனால், அமைச்சரின் பதில் சரியில்லை என கூறி திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம்‘, உங்களால் 24 மணி நேரம் பொறுத்துக்கொள்ள முடியாதா? எதை எடுத்தாலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறுகிறார்களே என கூறியவர்,  மத்திய – தமிழக அரசுக்கும் ஏதாவது சிக்கலை ஏற்படுத்தி, அதில் குளிர்காய முடியாதா என எதிர்க்கட்சியினர் பார்க்கிறார்கள், ஆனால் எதுவும் பலிக்காது என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், அவையில் தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சருக்கு சம்மதம் போல் தெரிகிறது, என்றவர், ஒரே நிலைப்பாடு என்று சொல்லும் நீங்கள தீர்மானத்தை கொண்டு வந்தால் என வினவினார்.

துரைமுருகனுக்கு பதில் அளித்த ஓபிஎஸ், இது தொடர்பாக நாளை நாடாளுமன்றத்தில் அதிமுக பிரச்சினை எழுப்பும் என்றும், மத்திய அரசின் முடிவை தொடர்ந்து, எதிர்க்கட்சியுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய துரைமுருகன், ஓபிஎஸ் சாதுர்யமான பதிலை அளித்துள்ளதாக கூறினார்.

இதையடுத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  இந்த விவகாரத்தை பொறுத்தவரை நாங்களும் உணவுப்பூர்வமாகவே அணுகுகிறோம்.. மத்தியஅரசின் முடிவை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்னர்  பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  இருமொழி கொள்கையை பின்பற்றும் அதிமுக அரசு இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ளாது என்றும்,  இது குறித்து மக்களவையில் நீங்கள் குரல் கொடுங்கள், மாநிலங்களவையில் நாங்கள் குரல் கொடுக்கிறோம்  என்று தெரிவித்தார்.

ஜெயக்குமார் பதில் திருப்தியாக இல்லை எனக்கூறி பேரவையில் திமுகவினர் கூச்சல் போட்டனர். தொடர்ந்து,  திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக அரசின் பதில் திருப்தியில்லை என்று கூறி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்,

அதைத் தொடர்ந்து,  மத்தியஅரசு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அரசு ஒத்துவராததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தபால்துறை தேர்வில் தமிழ் மொழி இடம்பெறக் கோரி நேற்று சமூக ஆர்வலர் ஹென்றி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையிட்டிருந்தார். அதை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், வினாத்தாளில் இந்தி, ஆங்கில மொழிகளுக்கு விலக்கு அளிக்க முடியாது எனக் கூறி தேர்வு முடிவுகளை ஜூலை 22ம் தேதி வரை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டு வழக்க ஒத்தி வைத்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.