டெல்லி: தபால் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கொரோனா தொற்றால் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக முதலில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பின்னர் மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஊரடங்கு காரணமாக விமானம் , ரயில் பேருந்து சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சரக்கு ரயில் மற்றும் அவசர விமான சேவைக்கு இயங்கி வருகின்றன.
மத்திய அரசின் பல்வேறு திட்டப்பயனாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்குவதற்காக நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசிஙன ஓய்வூதியம் உள்ளிட்டவை பயனாளர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றினால் தபால் சேவையின்போது உயிரிழக்கும் தபால் துறை ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தகவல் தொடர்பு அமைச்சகம் கூறி இருப்பதாவது: கோவிட் -19 பரவி வரும் நிலையில் பணியின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தபால் ஊழியர்கள் இறந்தால் ரூ .10 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டுதல்கள் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. கொரோனா நெருக்கடிகள் முடியும் வரை முழு காலத்திற்கும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.