டெல்லி,
எஸ் பி ஐ வங்கியுடன் அதன் துணை வங்கிகள் வரும் ஏப்ரல் முதல் தேதியில் இணைகின்றன. இதனால் துணை வங்கிகளின் அலுவலகங்களில் பாதியளவு மூடப்படுகின்றன. அதற்கான பணிகள் ஏப்ரல் 24 ம் தேதிக்குப் பிறகு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் பிக்கானர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 5 துணை வங்கிகள் தலைமை வங்கியான எஸ் பி ஐ உடன் இணைகின்றன.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எஸ் பி ஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் தினேஷ்குமார் காரா, துணை வங்கிகளின் 5 தலைமை அலுவலகங்களில் 2 மட்டும் இயங்கும், மற்ற 3 ம் மூடப்படும். இத்துடன் 21 மண்டல அலுவலகங்களும், 81 பிராந்திய அலுவலகங்களும் செயல்படாது என கூறினார். இந்த நடவடிக்கை ஏப்ரல் 24க்குப் பிறகு செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வங்கிகள் இணைப்புக்குப் பிறகு ஸ்டேட் பாங்கின் சொத்துமதிப்பு ரூ 30 லட்சம் கோடியிலிருந்து ரூ 40 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. மேலும் உலகின் முக்கிய 50 வங்கிகளில் ஒன்றாக எஸ்பிஐ இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. 550 எஸ்பிஐ அலுவலகங்கள் உள்ளன. இதன் துணை வங்கிகளின் எண்ணிக்கை 259 ஆகும். இவற்றில் 122 மூடப்படும் எனத் தெரிகிறது. இந்த நடவடிக்கையால் சுமார் 1100 ஊழியர்கள் தங்களது பணியிலிருந்து வேறு பணிகளுக்கு மாற்றப்படுகிறார்கள்.