சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விவகாரம் தொடர்பாக “விஞ்ஞானப்பூர்வமாக ஏதாவது ஆய்வு நடத்தினீர்களா?” என மத்திய அரசுக்கு டில்லி உயர் நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாலியல் குற்ற வழக்குகளில் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பழைய வழக்கு ஒன்றின் மீது விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி(பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய அரசுக்கு புதிய அவசர சட்டம் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பியது.
பாலியல் குற்றங்களுக்கு அடிப்படை காரணம் என்ன என்பதையும், 18 வயதுக்கு உட்பட்ட குற்றவாளிகள் இதில் ஈடுபடுவதை தடுக்க அவர்களுக்கு கல்வி கற்பிப்பது பற்றியும் மத்திய அரசு சிந்திக்கவில்லை. சிறுமிகள் பாலியல் பலாத்கார குற்றத்தை பொறுத்தவரை பெரும்பாலான வழக்குகளில் அந்த சிறுமியின் உறவினர்களோ அல்லது தெரிந்தவர்களில் யாரோ ஒருவர்தான் குற்றவாளியாக இருக்கிறார்.
பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதை பொறுத்தவரை நீங்கள் (மத்திய அரசு)விஞ்ஞான ரீதியாக ஏதாவது ஆய்வு நடத்தினீர்களா? இதனால் பாதிக்கப்படும் சிறுமிக்கு ஏற்படும் விளைவுகளை சிந்தித்து பார்த்தீர்களா? 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பலாத்காரப்படுத்தி கொலை செய்வதற்கும், பலாத்காரப்படுத்துவதற்கும் ஒரே தண்டனை (தூக்குதண்டனை) என்றால் அந்த சிறுமியை குற்றவாளிகள் உயிருடன் விட நினைப்பார்களா? என்பது பற்றி நீங்கள் யோசித்தீர்களா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.