அபுதாபி:

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்த போப் ஆண்டவர் பிரான்சிஸுக்கு லட்சக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமீரகத்தில் உள்ள ஜாயேத் விளையாட்டரங்கத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்றார். அமீரக அரசின் அழைப்பின் பேரில் 3 நாட்கள் பயணமாக இங்கு வந்த அவருக்கு, 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அரங்கிற்குள் 50 ஆயிரம் பேரும், வெளியே 1 லட்சத்து 20 ஆயிரம் பேரும் திரண்டிருந்தனர்.
இந்த வரலாற்று நிகழ்வில், அமீரக அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் பங்கேற்றார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் எல்லையில் உள்ள சவுதி அரேபியா இஸ்லாம் உதித்த இடம் என்று கருதப்படுகிறது. எனினும், அமீரக தலைநகரான அபுதாபிக்கு குடிபெயர்ந்த கிறிஸ்தவர்களுக்கு தேவாலயங்கள் அமைக்கவும், பிரார்த்தனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பிரசித்தி பெற்றவராக இருக்கிறார்.
சகிப்புத் தன்மை ஆண்டு என்ற கொண்டாட்டத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஏற்பாடு செய்திருந்தது. இதன் ஒரு பகுதியாக போப் ஆண்டவரையும் அமீரகம் அழைத்திருந்தது.

இந்தியாவைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், குடிபெயர்ந்த கிறிஸ்தவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், உணவகங்களில் பணியாற்றுவோர் என பல தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகையில் 85 சதவீதத்தினர் வெளிநாட்டவர்கள். இதில் 10 லட்சம் கிறிஸ்தவர்கள் இங்கேயே வாழ்கின்றனர்.
ஏமன் மற்றும் சிரியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற போப் ஆண்டவரின் வேண்டுகோளுடன் செவ்வாய்க் கிழமை பிரார்த்தனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய அவர், “உலகப் போரை நிராகரிக்க வேண்டிய கடமை அனைத்து மதத் தலைவர்களுக்கும் உள்ளது. குறிப்பாக ஏமன், சிரியா, ஈராக் மற்றும் லிபியாவில் இதனை வலியுறுத்த வேண்டும் என்று நினைக்கின்றேன். எந்த மதத்தினராக இருந்தாலும், சம  குடிமக்களாக நடத்தப்படவேண்டும். போர் போன்ற வன்முறைகள் களைந்து எறியப்பட வேண்டும்” என்றார்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் மற்றும் சன்னி முஸ்லிம்களின் கெய்ரோ இமாம் ஆகியோர், உலக அமைதி மற்றும் பரஸ்பரப ஒற்றுமையுடன் வாழ்வது தொடர்பாக அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

பேச்சுவார்த்தைக்கான முக்கியமான முன்னேற்ற நகர்வு ஏற்பட்டுள்ளதாக வாடிகன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இதனை நம்பிக்கை சுதந்திரம், சகிப்புத் தன்மை கலாச்சாரத்தை மேம்படுத்துவது, வழிபாட்டு தளங்களின் பாதுகாப்பு, சிறுபான்மையோர் முழுமையாக குடிமக்கள் என்ற நிலையை எட்டுவது ஆகியவற்றை நோக்கி பயணம் அமையவேண்டும் என வாடிகன் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளுக்கு சென்ற முதல் போப் ஆண்டவர் என்ற பெருமையுடன் இன்னும் 2 நாட்கள் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிககளில் போப் பிரான்சிஸ் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.