சென்னை:
பூந்தமல்லி தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு பதிவானதாக பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விளக்கம் கேட்டுள்ளதாக சத்தியபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் நேற்று 38 பாராளுமன்ற தொகுதி உள்பட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடித்தது. பொதுவாக அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஆனது. இந்த நிலையில், சில வாக்குச்சாவடியில், கள்ள வாக்குப்பதிவு என சலசலப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் 37 கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாக அரசியல் கட்சியினர் புகார் கூறினார். இதன் காரணமாக இரு கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட ஆவடி மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடியில் மாலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு நடந்த நிலையில் இயந்திரத்தில் இருந்து திடீரென சப்தம் வந்தது. இதன் காரணமாக அ.தி.மு.க- தி.மு.க இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து விசாரித்தபோது, அந்த வாக்குச்சாவடியில் 37 கள்ள ஓட்டு பதிவானது தெரியவந்தது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து, தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டு இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.