நெட்டிசன்:
நம்பிக்கைராஜ் (Nambikai Raj ) அவர்களின் முகநூல் பதிவு:
அறிஞர் அண்ணா மரணம் அடைந்திருந்த சமயத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் நெய்வேலி பகுதியில் தொடர் சொற்பொழிவில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு கூட்டத்தில், ‘ஆண்டவனை நம்பாதவர்கள் அமெரிக்காவுக்கே போனாலும் டாக்டர் மில்லரே வந்தாலும் இப்படித்தான் முடிவு ஏற்படும்’ என்று பேசியதாக செய்திகள் கசிந்தன. அண்ணாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயர் டாக்டர் மில்லர்.
போதாதா? அண்ணாவை இழிவுபடுத்திவிட்டதாகக்கூறி திமுக தொண்டர்கள் கிருபானந்த வாரியார் மீது தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, எம்.ஜி.ஆர் தொண்டர்கள் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக எம்.ஜி.ஆருக்குத் தகவல்கள் வந்தன. தாக்குதலின் தொடர்ச்சியாக வாரியாரின் சொற்பொழிவுக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. போலீஸாரின் உதவியுடன் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டார் வாரியார்.

எம்.ஜி.ஆர். – வாரியார்

வாரியார் தாக்கப்பட்ட செய்தி சட்டமன்றத்தில் எதிரொலித்தது. வாரியாரைத் தாக்கியது தவறு என்று ஆவேசமாகப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் கொறடாவான சட்டமன்ற உறுப்பினர் விநாயகம். அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் வாரியார் பேசியது தவறுதானே என்று எதிர்க்கேள்வி எழுப்பினர் திமுகவினர்.
பிரச்னை சட்டமன்றத்தில் எழுந்த சமயத்தில் வாரியாரைத் தாக்கியவர்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்தான் என்ற செய்தி எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. வாரியார் பேசியது தவறுதான். என்றாலும் அவரைத் தாக்கியது மோசமான காரியம். அந்தப் பெரியவரின் மனம் புண்பட்டிருக்கும். அவரைச் சமாதானம் செய்யும் வகையில் ஏதேனும் செய்யவேண்டும் என்று விரும்பினார் எம்.ஜி.ஆர். உடனடியாக ம.பொ.சியைத் தொடர்புகொண்டுபேசினார் எம்.ஜி.ஆர். வாரியாரை சமாதானப்படுத்த யோசனை ஒன்றைக் கொடுத்தார் ம.பொ.சி.
எம்.ஜி.ஆர் அவர்கள் தம் சொந்தச் செலவில் ஒரு ஆன்மீக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். கிருபானந்த வாரியாரையும் அழைத்துப் பேசச் செய்தார். அப்போதுதான் ‘ பொன்மனச் செம்மல்’ என்னும் பட்டத்தைத் எம்.ஜி.ஆருக்கு கொடுத்தார் கிருபானந்த வாரியார். எம்.ஜி.ஆரின் ஒரே எண்ணம் வாரியார் மீது பக்தி செலுத்தும் ஆத்திகர்களுக்கும் அறிஞர் அண்ணாவிடம் பக்தி செலுத்தும் அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்ட பகை தீரவேண்டும் என்பதுதான்.