வேதாரண்யம்,
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு வீர விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நீச்சல் போட்டி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் 4 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் படகு மூலம் வேதாரண்யம் கடல் பகுதிக்கு சென்றனர். அங்கு ஆழமான கடல் பகுதிக்கு சென்று போட்டியை தொடங்கி உள்ளனர்.
ஆனால் அவர்களால் நீச்சல் அடிக்க முடியாததால் தண்ணீரில் மூழ்கி திணறி உள்ளனர். இதைகண்ட மற்றவர்கள் அவர்களை மீட்டு உடடினயாக கரைக்கு கொண்டு வந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த பிரவீண்குமார் , பரத், யுகேந்திரன், கணிஷ்கர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் வேதாரண்யம் மற்றும் நாகை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.