பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 17ம் தேதியும் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17.01.2025 அன்று விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025, 18.01.2025 மற்றும் 19.01.2025 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் அதற்கு இடைப்பட்ட நாளான 17.01.2025 (வெள்ளி கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 25-1-2025 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி இம்மாவட்டத்தில் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு முழுவதும் 17ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து 6 நாள் தொடர் விடுமுறையுடன் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழக மக்கள் தயாராகி உள்ளனர்.