சென்னை:  சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் வரும் 11ந்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தென்மாவட்ட மக்களுக்கு பொங்கல் பரிசாக அமைந்துள்ளது.

தென்மாவட்ட மக்களிடையே பெரும் வரவற்பை பெற்றுள்ள அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் இதுவரை 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தநிலையில், வரும் 11ந்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.  அதன்படி,  நெல்லை – சென்னை – நெல்லை வந்தேபாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப் பட்டு 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக வரும் 11ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று,  கடந்த 2023-ம் ஆண்டு செப்.24-ம் தேதி  சென்னை நெல்லை வந்தேபாரத் ரயில் தொடங்கப்பட்டது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதேநாள் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது. இந்த ரயிலில் 7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த பகல் நேர ரயில் சேவை தொடங்கியது முதல் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே, இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், இந்த ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “எழும்பூர் – திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில், பயணிகள் தேவை பல மடங்கு அதிகரித்து உள்ளது. எனவே, இந்த ரயிலில் இரு மார்க்கத்திலும், வரும் 11-ம் தேதி முதல் 16 பெட்டிகளாக இணைத்து இயக்கப்பட உள்ளன. இதனால், கூடுதல் பயணிகள் செல்ல முடியும்.

இதுபோல, கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் – காசர்கோடு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகளில் இருந்து 20 பெட்டிகளாக அதிகரித்து, வரும் 10-ம் தேதி முதல் இயக்கப்படும்”

இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.