சென்னை: மாநிலம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது. ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன் விநியோகத்தை தொடங்கி உள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இரண்டு கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்காக அரசு சார்பில் ரூ.249.76 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இலவச வேட்டி சேலைகளும் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்குவதற்கு தயாராக உள்ளன. ஆனால், இந்த ஆண்டு பணம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதன்முதலாக துணைமுதல்வர் ஸ்டாலின் தொகுதியான, சேப்பாக்கம் தொகுதியில் டோக்கன் விநியோகம் தொடங்கியது. சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா விடுதி பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு டோக்கன் விநியோகம் தொடங்கி உள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர்.
டோக்கனில் குறிப்பிடப்படும் நாளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், நாள்தோறும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பெறும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளைப் போலவே ரொக்கத் தொகையை வழங்க வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் இரண்டாயிரம் ரூபாய் வழங்கக் கோரி பாஜக சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் நேரங்களில் மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.