புதுச்சேரி:

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு பட்டங்களை வழங்க உள்ள நிலையில், பல்கலைக் கழகத்தில் முதலிடம் பிடித்து, கோல்டு மெடல் பெற்ற மாணவி, குடியரசுத் தலைவரிடம் பட்டம் பெற விரும்பவில்லை என்று அதிரடியாக அறிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்ததுக்கு எதிராக அரசியல் கட்சிகள்  போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திலும், மத்தியஅரசின் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று திட்டமிட்டபடி பட்டமளிப்பு விழா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெறுகிறது. இதை புறக்கணிப்பாக மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி (எலக்ட்ரானிக் மீடியா) முதலிடம் பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த கார்த்திகா குருப் என்ற மாணவி, குடியரசு திருத்த சட்டத்தை எதிர்க்கும் வகையில், குடியரசுத் தலைவரிடம் இருந்து பட்டத்தையும், தங்கப்பதக்கத்தையும் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளார்.  இந்திய ஜனாதிபதி கலந்துகொள்ளும், நிகழ்ச்சியை அவர் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள மாணவி கார்த்திகா, “இது எனது தனிப்பட்ட விருப்பம் என்றும், சிஏஏ சட்டம்  மனிதகுலத்திற்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது,  இந்த சட்டத்தை எதிர்ப்பது எனது ஜனநாயக உரிமை. இந்த சட்டத்தை அரசாங்கம்வாபஸ் பெறும் வரை பட்டத்தை ஏற்க மாட்டேன்” என்று அதிரடியாக அறிவித்து உள்ளார்.

மாணவியின் துணிச்சலான அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.