சென்னை: 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால்,  ஏப்ரல் மாதத்தில் நடைபெற வேண்டிய மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து,  அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வருகிற 14-ந் தேதி முதல் தொடங்குவதற்கான நடைமுறைகளை பள்ளி கல்வித்துறை செய்துள்ளது. தலைமை ஆசிரியர்கள், ஊழியர்கள் 14-ந் தேதி பள்ளியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 21-ந் தேதியில் இருந்து பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில் மற்ற வகுப்புகளுக்கும் மாணவர்களை சேர்ப்பதற்கும், சத்துணவு சாப்பிடக்கூடிய மாணவர்களுக்கு அதற்கான உணவு பொருட்களை வழங்கவும், பள்ளிக்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கும் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்கள் எடுத்து கொள்ளப்படும் என்றும், பெரியார், காமராஜர், அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் நியமன முறைகேடு பற்றி விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.