திருச்சி:
திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தம் போன்ற வதந்தியை நம்ப வேண்டாம் என தேர்தல் அதிகாரி திவ்யதர்ஷினி கூறினார்.

திருச்சி மேற்கு தொகுதி திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் பணப்பட்டுவாடா குறித்து மாறி மாறி புகார் அளித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடக்குமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் நேற்று முதல் தங்களது தபால் ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர். கடந்த 26ம் தேதி மண்டல அலுவலர்கள், பறக்கும் படையினர், கண்காணிப்புக்குழு உள்ளிட்டோர் வாக்களித்தனர். தொடர்ந்து நேற்றைய தினம் (27ம் தேதி) வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் வாக்களித்தனர். இதன்படி மாவட்டத்தில் உ ள்ள 9 தொகுதிகளிலும் மொத்தம் நேற்று 8, 194 பேர் வாக்களித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து, திருச்சி மாநகர போலீசார் 1, 672 பேர் தங்களது தபால் ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர். நாளைய தினம் புறநகர் போலீசார் 981 பேர் தபால் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில், திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட, தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூர், கண்டோன்மெண்ட் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றும் ஆய்வாளர்கள் முதல், காவலர்கள் வரை, தனித்தனி கவர்களில் பணம் வைத்து விநியோகம் செய்யப்படுவதாக தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திடீர் ஆய்வு செய்தார். இதில் சுமார் 100 கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீசார், வருவாய் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தில்லைநகர், அரசு மருத்துவமனை காவல்நிலைய எழுத்தர்களிடம் (ரைட்டர்) காவல்துறை உதவி ஆணையர் வீரமுத்துவும் தனியாக விசாரணை நடத்தினார். இதையடுத்து, தில்லை நகர் ஆய்வாளர் சிவகுமார், தலைமைக் காவலர் சுகந்தி, அரசு மருத்துவமனை எஸ்.ஐ பாலாஜி, காவலர் ஸ்டெல்லா, நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் சங்கரன், கலியமூர்த்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி சந்தேகத்திற்கிடமான, 8 காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாரை கூண்டோடு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் தேர்தல் அதிகாரி திவ்யதர்ஷினியிடம் தேர்தலை நிறுத்த பரிந்துரை செய்வீர்களா? என்ற கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தம் போன்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்று கூறினார்.