கோவை:
தமிழக மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ள பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத் தில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும், நேர்மையாக விசாரணை நடத்தி, இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று 3வது நாளாக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான சில வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் குலை நடுங்க வைத்துள்ளது. பெண்களை நடுங்க வைக்கும் வகையில், நாசகார கும்பல் இளம்பெண்களை துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்து, மிரட்டி அவர்களை கொடுமை படுத்தி வந்துள்ள சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். அரசியல் கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கல்லூரி மாணவ மாணவிகளின் போராட்டம் இன்று 3வது நாளாக தொடர்ந்து வருகிறது. பொள்ளாச்சி பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு, போராட்டம் காரணமாக அரசு விடுமுறை அறிவித்துள்ளதால், மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரி மாணவ மாணவிகள் போராடி வருகின்றனர்.
கோவை அருகே உள்ள உடுமலைப்பேட்டை கல்லூரி மாணவ மாணவிகள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தஞ்சை உள்பட தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கல்லூரி நிர்வாகம் மாணவ மாணவிகளை வெளியே செல்ல அனுமதி மறுத்து, கேட்டை பூட்டி விடுவதால், பல கல்லூரிகளில் மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்ற னர். சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யக்கோரி கோவை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவ, மாணவிகளின் சார்பில் கண்டன பேரணியும் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினரும் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவ மாணவிகளின் போராட்டம் வீறு கொண்டு எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. இது அதிமுக அரசை ஆட்டம் காண வைத்துள்ளது….