சென்னை:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு ஏப்ரல் 1ந்தேதி நக்கீரன் கோபால் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும், அவமானங்களையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நக்கீரன் ஆசிரியர் கோபால் தெரிவித்த தகவல்கள் குறித்து குற்றச்சாட்டு எழுந்தது.
நக்கீரன் கோபால் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் பொதுவெளியில், அவரது பத்திரிகை மற்றும் இணையதளம் மூலமாக அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதாக பொள்ளாச்சி ஜெயராமன் புகார் கொடுத்திருந்தார்.
இதையடுத்து நக்கீரன் கோபால் விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியது. சம்மனில் வரும் 30ந்தேதி கோபால் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து நக்கீரன் கோபால் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், இந்த வழக்கு எப்போது சிபிஐக்கு மாற்றப்படும்? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், வழக்கின் தற்போதைய நிலை குறித்து விளக்கி னார். மேலும், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கான நடைமுறை கள் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.
அதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சிபிஐக்கு மாற்றுவதாக அரசு அறிவித்த பிறகும், சிபிசிஐடி விசாரணை தொடர்வது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில்அளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்த தமிழக அரசின் பரிந்துரை கடிதம் சிபிஐக்கு வந்து விட்டது. வழக்கை சிபிஐ விசாரிப்பது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, நக்கீரன் கோபால் 30ந்தேதிக்கு பதில் ஏப்ரல் 1-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக நக்கீரன் கோபால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.