சென்னை:
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது காவல்துறை குண்டர் சட்டத்தை பாய்ச்சி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளிகளான கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரின் குண்டர் சட்டத்தை செய்து சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
கடந்த மார்ச் மாதம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தனது முகநூல் பெண் நண்பரை காரில் அழைத்துச்சென்று, தனது நண்பர்களை வைத்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, அவரிடம் இருந்து நகை, பணம் பறித்ததாக கூறப்பட்டது. இது தொடர்பான விசாரணையின்போது, திருநாவுக்கரசு தலைமையிலான கும்பல் நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டி வந்தது தெரிய வந்தது. மேலும், அவர்களிடம் இருந்து, 40-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்களை கைப்பற்றினர்.
இதையடுத்து, ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கூறப்படும் வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகிய 2 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டர்.
இதை எதிர்த்து, அவர்களின் பெற்றோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், குண்டர் சட்டத்தில் அவர்களை அடைக்கும் உத்தரவில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், ஆதலால் அந்த உத்தரவை ரத்து செய்து, 2 பேரையும் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்காராமன்ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என்றும், ஆவணங்கள் தெளிவில்லாமல் இருக்கிறது என்றும் கூறி, குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கும் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.