சென்னை:
முகநூல் மூலம் நட்பை ஏற்படுத்தி, நூற்றுக்கணக்கான பெண்களை மிரட்டி, பாலியல் வன் கொடுமை செய்தது தொடர்பாக ஒரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள்மீது தீவிர நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்கி வருகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் குதித்த நிலையில், வழக்கு 6 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக திருநாவுக்கரசு வெளியிட்ட வாட்ஸ்அப் தகவலில், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முக்கிய பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டி ருந்தது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்துக்கு பின்னணியாக இருந்து செயல்பட்டு வந்தவர்கள் பொள்ளாச்சி பகுதியை சேர்நத் ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர், இந்நாள் அமைச்சர் ,முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களது மகன், என கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பலரது பெயர்கள் சமூக வலைதளங்களிலும் வெளியாகி மேலும் பரபரப்பை கூட்டி வருகிறது.
தற்போது, திருநாவுக்கரசு கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கூறிய முக்கிய நபர் யார் என்று பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கிடையில், ஆளுங்கட்சியினர் பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்களை சரிகட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலியல் கும்பல்கள் மீது, சாதாரண குற்றவழக்கு பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஐபிசி சட்டப்பிரிவு 354(ஏ) பாலியல் தொல்லை, 354-(பி), இணையதளம் மூலம் பெண்களுக்கு தொல்லை, ஐபிசி 66(இ) பெண்கள் மீதான தாக்குதல் போன்ற பிரிவுகளில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளில் சம்பந்தப்பபட்ட குற்றவாளிகளுக்கு அதிக பட்சமாக ரூ.2000 அபராதம், சில நாட்கள் நீதிமன்ற காவல் மட்டுமே தண்டனை வழங்க முடியும். இவர்கள் மீது கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே பொள்ளாச்சி நகர காவல்துறையில் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த கேவலமான செயலை செய்ய அந்த இளைஞர்கள் கும்பலை தூண்டியவர் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி என்ற தகவலும் பரவி வருகிறது.
இந்த நிலையில், திமுக தலைவர், குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சி போராடுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
’’பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை காமுகர்கள் கூட்டம் ஒன்று கொடூரமான பாலியல் வன்முறைக்குட்படுத்தியிருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியும் அது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
சில நிமிடங்களே நீடிக்கும் அந்த வீடியோவைப் பார்க்க முடியாத அளவுக்கு அபலை மாணவிகள் அலறித் துடிக்கும் காட்சிகள் உள்ளன. இந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் ஆளுங்கட் சியைச் சேர்ந்தவர்கள் துணையாக இருப்பதும் நக்கீரன்-ஜூனியர்விகடன் போன்ற பத்திரிகைகளில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சிப் பகுதியில் பொதுமக்களும், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களை நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
நீண்ட நாட்களாக நடைபெறும் இந்த மிகப் பெரிய அளவிலான பாலியல் வன்முறையில் ஒரு துளி மட்டுமே வெளிவந்துள்ளது. காவல்துறை தரப்பிலும் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வில்லை. சிக்கியவர்களைத் தப்பவிடுவதற்காக ஆளுந்தரப்பு பகீரத முயற்சி எடுத்து வருகிறது.
தமிழ்நாடே குலை நடுங்கும் வகையில் இளம்பெண்களை சீரழிக்கும் மிக மோசமான ஒரு கலாச்சாரத்திற்கு ஆளுங்கட்சியான அ.தி.மு.க. துணை போவது கடும் கண்டனத்திற்குரியது. தவறு செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால நலன் பாதுகாக்கப்படும் வகையில் விசாரணை நடைபெற வேண்டும். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். அ.தி.மு.க. ஆட்சியின் 8 ஆண்டு காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு சென்னை தொடங்கி பொள்ளாச்சி வரை ஏராளமான கொடூர நிகழ்வுகள் நடந்துள்ளன. பொள்ளாச்சியில் நடந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதனை வலியுறுத்தி, தி.மு.கழகம் சட்டரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் தனது போராட்டத்தை மேற்கொள்ளும்.’’
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.