பொள்ளாச்சி வழக்கு.. மூன்று தரப்புக்கு பாடம்..
இளம் பெண்களிடம் நெருக்கமாக பழகி வற்புறுத்தியும் மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவும் எடுத்து ஒரு கும்பலே மிரட்டி வந்ததுதான் பொள்ளாச்சி பயங்கரம்.
2019 ஆம் ஆண்டு துவக்கத்தில் நண்பரை நம்பி காரில் ஏறிச் சென்ற ஒரு இளம் பெண் நான்கு இளைஞர்களால் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டு தொடர் சித்ரவதைகளுக்கு ஆளானார்.
வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று கும்பல் அடிக்கடி மிரட்டி பணம் கேட்டதால் வேறு வழியின்றி அந்தப் பெண் விஷயத்தை பெற்றோரிடம் கூறுகிறார்..
குற்றவாளிகளின் பின்புலம் அதிமுக புள்ளிகளின் அரசியல் பலம் வாய்ந்தது என்பதால், போலீசார் புகாரையே எடுக்க மறுக்கின்றனர்..
இதற்கு இடையே பொள்ளாச்சி கும்பலால் ஏராளமான இளம் பெண்கள் இதே போல் பாலியல் சித்ரவதை கம் வீடியோ பிளாக் மெயில் செய்யப்பட்டிருப்பது அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வந்தது.
அதிலும் பெண்கள் மிரட்டப்பட்டது தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாக வெளியாக தமிழ்நாடே அதிர்ந்து போனது
குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் அதிமுகவுக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவர்களை காக்க அப்போதைய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பகீரத பிரயத்தனம் செய்கிறார் என்றும் குற்றச்சாட்டு வெடித்தது
வழக்கு விசாரணை சூடு பிடிக்காதால் எதிர்க்கட்சியான திமுக விவகாரத்தை கையில் எடுத்து எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக தொடர்ந்து வெளுத்து வாங்கியது.
அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பும் கொதித்துப் போன நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டார் முதலமைச்சர் பழனிசாமி.
சிபிஐ நடத்திய வழக்கில்தான் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் தற்போது குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளின் கொடூரத் தன்மையை சமூகத்திற்கு சொல்லும் சொல்லும் வகையில் சிலருக்கு மூன்று முதல் ஐந்து ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது பேரும் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டு விட்டனர்..
ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு யார் நடவடிக்கையால் இப்படிப்பட்ட தீர்ப்பு கிடைத்துள்ளது என்பதில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான சண்டைதான் ஓயவில்லை. இன்னமும் உக்கிரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
வழக்கை சிபிஐக்கு மாற்றி இந்த பெண்களுக்கு நீதி கிடைக்க செய்ததே தாம்தான் என்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி..
“திமுக அழுத்தம் தராமல் இருந்திருந்தால் வழக்கை சிபிஐக்கு மாற்றாமல் அப்போதே குழி தோண்டி புதைத்து இருப்பார் எடப்பாடி பழனிச்சாமி” என்று காட்டமாக சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பொள்ளாச்சி வழக்கை நாங்கள் சிபிஐக்கு மாற்றியதைப்போல் அண்ணாநகர் பத்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திமுக புள்ளி ஞானசேகர் நடத்திய தொடர் பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான வழக்குகளை ஸ்டாலின் சிபிஐக்கு மாற்றத் தயாரா என்று பதிலுக்கு சவால் விடுகிறார் எடப்பாடி.
சட்டமன்றத் தேர்தல் நடந்து முடியும் வரை இந்த சண்டை இரு கழகங்களுக்கு இடையே ஓயாது என்பது மட்டும் நிச்சயம்.
எவ்வளவு அரசியல் பலத்தைக் காட்டி குற்றவாளிகளை காப்பாற்ற முற்பட்டாலும் கடைசியில் நீதி வெல்லும் போது அவமானத்திற்கு உள்ளாக நேரிடும் என்பது அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம் இது.
இரண்டாவது பாடம், பெண்களுக்கு..
உதாரணத்திற்கு ஒரு சம்பவம்.
பல மாதங்களுக்கு முன்பு சென்னை மெரீனாவில் காதலனோடு தனிமையில் இருந்திக்கிறார் ஆவடியை சேர்ந்த ஒரு இளம்பெண்..
அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் அன்யோன்ய காட்சிகளை செல்போனில் படம் பிடித்து அந்தப் பெண்ணை மிரட்டி நம்பர் பெற்றுக் கொண்டு வீடியோ காட்சியையும் அவருக்கு அனுப்பியுள்ளனர்..
தங்கள் இஷ்டப்படி நடந்தால் வீடியோ வெளியே வராது என்றும் மிரட்டியுள்ளனர். ஆனால் பெண்ணோ. வீடியோவை கண்டு முதலில் அலறினாலும் பிறகு துணிச்சலாக போலீசாரிடம் சொல்லிவிட்டார்.
போலீசார் ஒரு பிளான் போட்டுத்தந்தனர். அதன்படி, பெண் வரச்சொன்ன இடத்திற்கு இளைஞர்கள் ஆசையோடு வர. அங்கே மறைந்திருந்த போலீசார் கொத்தாக அள்ளி இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இதுபோல் துணிச்சலுடன் புகார் கொடுக்க முன்வராமல் மனதுக்குள்ளேயே போட்டு புழுங்கி புழங்கி தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்கள் பட்டியல் பெரியது.
பொள்ளாச்சி விவகாரத்திலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வந்த துணிச்சல்தான், பண பலம் அரசியல் செல்வாக்கு வாய்த்தவர்களாக இருந்தாலும் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையை பெற்று தந்திருக்கிறது.
இந்த ஆண்ட்ராய்டு காலத்தில் அரசும் காவல்துறையும் மூடி மறைக்க முயன்றாலும் சமூக வலைத்தளங்கள் திரும்பத் திரும்ப நெருப்பை பற்றவைத்துக் கொண்டே இருக்கும் என்பதை பெண்கள் தங்களுக்கு கிடைத்த ஒரு பலமாக கருத வேண்டும்.
வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய கடமைகளை மறந்து விட்டு மூடி மறைப்பதற்கு உதவினால், ஊடகங்களும் அவமானங்களை சந்திக்க நேரிட்டு மதிப்பிழந்து போய்விடும்.
கடைசி பாடம், பெற்றோருக்கு.
இதில் நீங்கள் நாங்கள் என எல்லோருமே அடக்கம்.
வயது கோளாறு காரணமாக சந்தர்ப்ப வசத்தால் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் இளம் பெண்கள், தங்கள் குடும்பத்தாரிடம் பிரச்சினையை சொன்னால், எடுத்த எடுப்பில் அவளையே பெரிய குற்றவாளியாக பார்க்கும் நிலை தான் இன்றும் பெரும்பாலான இடங்களில் உள்ளது.
முதலில், தான் பெற்ற மகளை கேவலமாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.. “உன்னை யார் அங்கேயெல்லாம் போகச்சொன்னது?” என்றும் எகிறக்கூடாது..
இப்படியொரு தவறான அணுகு முறையால் தான் சேலம் எளம்பிள்ளை வினுப்பிரியா, போட்டோ மார்பிங் விவகாரத்தில் பெற்றோரால் நொந்துபோய் தற்கொலை செய்துகொண்டார்..
நம் பெண்ணை கண்டிப்பதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்துக்கொண்டு. முதலில் நம் வீட்டு பிள்ளையை, சம்மந்தமே இல்லாத ஒரு நாய் மிரட்டுவதா என்று களமிறங்குதல் நல்லது.. ..
கேவலமான எதிரியை சட்டப்படி சிக்கவைத்துவிட்டு பிறகு பெண்ணுக்கு புத்திமதி சொல்லலாம்.
இந்த வயசில் உனக்கு இதெல்லாம் தேவையாடி என்றெல்லாம் பொங்கலாம்.. ஆனால் இளமையில் தான் இதுபோல உணர்ச்சிகள் கொந்தளிக்கும்..அப்படி கொந்தளிந்தால்தான் அதற்கு பெயர் இளமை..
ஆணாகட்டும் பெண்ணாகட்டும் இன்று பெரியவர்களாக உள்ளவர்களும் அப்படிப்பட்ட இளமையை, பலவிதமான உணர்ச்சிப் போராட்டங்களோடு கடந்தவர்கள்தானே..
பெற்றோருக்கு முதலில் தேவைப்படுவது மிரட்சியை குறைய வைக்கும் மனப் பக்குவம்.
”உன் புகைப்படம் ஆபாசமாக மார்ஃபிங் செய்யப் பட்டால் அதை தைரியமாக நீ எப்படி எதிர் கொள்ளவேண்டும்?” என்பதை பெண்களுக்கு கற்றுத்தர வேண்டிய காலத்தின் கட்டாயம் இது..
குற்றவாளிக்கு தண்டனை என்ற பேச்செல்லாம் அடுத்த கட்டம்தான்..
தன்னையே நிர்வாணமாக படமெடுத்து சமூக வளைத்தலங்களில் பரப்பிவிட்டு, பின்னர் “என் படத் தை மார்பிங் செய்துவிட்டார்கள்” என்று குய்யோ முய்யோவென கூவி பரபரப்பு ஏற்படுத்தி, படங்களில் சான்ஸ் பிடிக்கிற நடிகைகளெல்லாம் வாழுகிற அற்புதமான காலம் இது என்றெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
“உன் அழகை கண்ணாடி முன்னாடி நாள் பூரா பார்த்து சந்தோஷப்பட்டுக்கோ அதைவிட்டுட்டு, செல்போன்ல படம் எடுத்து வெக்கிறது பின்னாளில் எந்த வழியிலாவது கண்டிப்பாக ஆபத்தை வரவழைத்தே தீரும் என்று அறிவுறுத்த வேண்டும்
இந்த போட்டோஷாப் விவகாரம் எல்லாம் ம..ருக்கு சமானம் என்று சொல்லி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலில் ஆதரவாக பேசினாலே போதும்..அந்த பெண்ணின் மன உளைச்சலை தொண்ணூறு சத வீதம் குறைத்துவிடலாம்..
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.
சிக்கலில் மாட்டிக் கொள்ளும் பெண்களுக்கு எப்படி தைரியமான மனப்பான்மை வளர்க்க வேண்டியது கட்டாயமோ அதே போலத்தான், ஆண் பிள்ளைகளை பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் என்னென்ன விளைவுகளையெல்லாம் சந்தித்து வாழ்க்கையே நாசமாகி போய்விடும் என்பதையும் சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டும்..
ஒரு பெண் ஒரு நேரத்தில் அவள் மட்டுமே பாதிக்கப்படுவாள். ஆனால் ஆண் பிள்ளை மோசமானவனாக இருந்தால் அந்த ஒரே ஒருவன், எத்தனை பெண்களை வேண்டுமானாலும் நாசப்படுத்திவிட முடியும்.
சுருக்கமாகச் சொன்னால் ஆண் பிள்ளையை நல்லபடியாக வளர்த்தால் அவனைச் சுற்றியுள்ள பல பெண்களின் வாழ்க்கையை காப்பாற்றி விட முடியும்.
இப்படி பிள்ளைகளை நல்லபடியாக வளர்க்காததால் தான் பொள்ளாச்சியில் ஒன்பது பேர் தங்களது பிள்ளைகளை சாகும் வரை ஆயுள் என்ற தண்டனைக்கு பலியிட்டு இருக்கிறார்கள்.
“ஊரில் யார் செய்யாததை என் பிள்ளை மட்டும் செய்து விட்டான். வயசு பசங்கன்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க” என்று பிள்ளைகளின் சிறிய சிறிய தவறுகளை எல்லாம் நியாயப்படுத்தி ஆரம்பத்தில் பெற்றோர் காட்டும் அலட்சியமே பேரழிவுக்கான ஆணிவேர்..
by ஏழுமலை வெங்கடேசன்