ராஞ்சி: வீரர்களுடைய பிணங்களின் மீதும், ராணுவ நடவடிக்கைகளின் மீதும் மேற்கொள்ளும் அரசியல், வாக்குகளைப் பெற்றுத்தராது என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது, “பாரதீய ஜனதா கட்சியால், நாட்டையோ அல்லது மாநிலத்தையோ வழிநடத்த முடியாது. ஒரு ராணுவ நடவடிக்கையை, நாட்டில் தற்போது நிலவும் மிகப்பெரிய அவலங்களை மறைப்பதற்காக பயன்படுத்துகிறார்கள்.
போர் என்பது அரசினுடைய வேலைகளில் ஒன்றுதானே ஒழிய, அதுவே பிரதான வேலை அல்ல. இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
விவசாயிகள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய மகன்களான ராணுவ வீரர்களோ, இந்த அரசின் அலட்சியமான மற்றும் மோசமான செயல்பாட்டால், எல்லையில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். பாரதீய ஜனதாவின் இத்தகைய மோசடி அரசியல் வாக்குகளைப் பெற்றுத்தராது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான எங்களின் கூட்டணி அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம். ஒருசில சிக்கல்கள் மட்டுமே பேசித் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. எனவே, சில நாட்களில், எங்களின் தலைவர் சிபு சோரன் முன்னிலையில் அறிவிப்பு வெளியாகும்” என்றார்.
– மதுரை மாயாண்டி