இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கட்சி தலைவர்கள், தேர்தல் பிரசாரம் செய்யும் போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள், கட்சி வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது. இந்த சலுகையை பெற, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், 30 பேர் பெயர் பட்டியலையும், அங்கீகாரமற்ற கட்சிகள், 15 பேர் பட்டியலையும் அனுப்ப வேண்டும்.
தேர்தல் செலவினத்தில் இருந்து, விலக்கு பெற வேண்டிய தலைவர்கள் பெயர் பட்டியலை, தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து, 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில், சட்டசபை தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலுக்கான முறையான அறிவிப்பு, வரும், 12ம் தேதி வெளியிடப்படஉள்ளது .
எனவே, செலவு தொகையிலிருந்து, விலக்கு பெற விரும்பும் கட்சிகள், தங்கள் கட்சி சார்பில், பிரசாரம் செய்யும் தலைவர்கள் பெயர் பட்டியலை, 22ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இந்த பட்டியலில் உள்ளவர்களின், பயண செலவுக்கு மட்டும், விலக்கு அளிக்கப்படும்.
இது தவிர, மற்ற செலவினங்கள் அனைத்தும், வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதே நேரம், வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திர தலைவர் பிரசாரம் செய்தால், அதில், விலக்கு கோர இயலாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.