சென்னை,
போலியோ நோய் குறித்து தவறான தகவல் தெரிவித்தது அம்பலமானதால் தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை தனது விளம்பர பதிவை அதிரடியாக அகற்றி உள்ளார்.
காங்கிரன் அரசின் சாதனையை மோடியின் சாதனை என்று விளம்பரப்படுத்திய தமிழிசைக்கு கடும் கண்டனங்கள் வந்ததை தொடர்ந்து தனது பதிவை அகற்றி உள்ளார்.
தமிழகத்தில் சர்ச்சையை தொடங்கி வைப்பதில் தமிழக பாரதியஜனதா தலைவர்களிடையே போட்டிபோலும்.. மெர்சல் சர்ச்சையை தொடங்கிய தமிழிசை தற்போது போலியோ குறித்த சர்ச்சையையும் தொடங்கி உள்ளார்.
பிரதமர் மோடியால்தான் போலியோ நோய் ஒழிந்தது என்று ஒரு விளம்பரம் தயார் செய்து அதை தனது சமூக வளைதள பக்கத்தில் பதிவேற்றியிருந்தார் தமிழிசை சவுந்தரராஜன்.
ஆனால், இந்தியாவில் போலியோ நோய் ஒழிந்தது கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போதுதான். அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் எடுத்த முயற்சியின் காரணமாக போலியோ ஒழிந்ததாக, உலக சுகாதார நிறுவனத் தலைவர் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
அதுபோல ரோட்டரி பண்ணாட்டு அமைப்பு போலியோ ஒழிப்பு சாதனையாளர் விருதும், தொடர்ந்து, போலியோ இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் கடந்த 27.03.2014 அன்று அறிவித்து, அதற்கான சான்றை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடம் வழங்கியது.
அதே நேரத்தில் 29.03.2014-ம் நாள் அப்போதைய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி டாக்டர் அன்புமணி ராமதாஸ்க்கு போலியோ ஒழிப்புக்காக பாடுபட்டதை கவுரவித்து விருது வழங்கினார்
உண்மை இப்படி இருக்க, தமிழக பாஜ தலைவர் தமிழிசையோ, தனது டுவிட்டர் வளைதள பக்கத்தில் ‘போலியோ இல்லாத இந்தியா, தூய்மை இந்தியா கனவு நாயகனுக்கு நன்றி’ என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு சமூக வளைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி சர்ச்சையை உருவாக்கியது. பலர் ஆதாரப்பூர்வமாக கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
காங்கிரஸ் அரசின் ஒரு சாதனையை எப்படி தங்களது சாதனை என்று விளம்பரப்படுத்தலாம் என தமிழிசையை வலைதளங்களில் வறுத்தெடுத்தார்கள்.
இதன் காரணமாக, தனது பதிவை இரவோடு இரவாக நீக்கி உள்ளார் தமிழிசை. அதற்கு பதிலாக , ‘2.95 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கியது மோடி அரசு’ என்று புதிய பதிவை பதிவிட்டுள்ளார்.
தமிழக பாரதியஜனதா தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துக்கள் தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.