போலந்து
எட்டு மாத கைக்குழந்தை அறுவை சிகிச்சை செலவுக்காகத் தனது ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை போலந்து வீராங்கனை மரியா ஆண்ட்ரேஜிக் ஏலம் விட்டுள்ளார்.
ஈட்டி எறிதலில் வீராங்கனையான மரியா ஆண்ட்ரேஜிக் போலந்து நாட்டை சேர்ந்தவர் ஆவார். ஏற்கனவே ஈட்டி எறிதலில் பல சாதனை படைத்த இவர் 2016 ரியோ ஒலிம்பிக்கில் நான்காம் இடத்தைப் பிடித்ததால் வெண்கலப் பதக்கத்தைப் பெறும் வாய்ப்பை இழந்தார். அதன் பிறகு அவருக்குத் தோளில் காயம் ஏற்பட்டதால் பல போட்டிகளில் பங்கேற்க இயலவில்லை.
கடந்த 2018ல் மரியாவுக்கு புற்று நோய் உள்ளது தெரிய வந்தது. ஆயினும் அவர் அதற்கு பிறகும் தனது வேகத்தைக் கூட்டி டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதனை புரிய முன் வந்தார். அவ்வப்போது அவரது உடல்நிலை தொந்தரவு அளித்த போதிலும் அதைச் சட்டை செய்யாமல் டோக்கியோவில் ஒலிம்பிக் பதக்கம் பெறத் தயாராகி வந்தார்.
டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 64.61 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அவர் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இவர் ஒலிம்பிக் போட்டியில் கிடைத்த வெள்ளிப் பதக்கத்தை தற்போது ஏலம் விட்டுள்ளார். ஆனால் இது அவருக்காக அல்ல. போலந்தில் ஒரு எட்டு மாத ஆண் குழந்தையின் அறுவை சிகிச்சை செலவுக்காக ஏலம் விட்டுள்ளார்.
போலந்தில் பிறந்து 8 மாதமே ஆன மிலோசெக் மலிசா என்னும் ஆண்குழந்தைக்கு உடனடியாக இருதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. அதற்கு 3,85,088 டாலர்கள் பணம் அதாவது கிட்டத்தட்ட ரூ.3 கோடி தேவைப்பட்டது. இதை அறிந்த மரியா தனது ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட முன் வந்தார். பதக்கம் 1,25,000 டாலருக்கு ஏலம் போனது.
அந்த பணத்தை மரியா குழந்தையின் பெற்றோரிடம் அளித்துள்ளார். ஏற்கனவே சிறிது நிதி திரட்டி இருந்த பெற்றோருக்கு இதன் மூலம் அறுவை சிகிச்சைக்குத் தேவையான பணம் கிடைத்துள்ளது. இந்த தகவல் அறிந்த ஏலம் எடுத்த நிறுவனம் மரியாவிடம் பதக்கத்தைத் திரும்ப அளித்துள்ளது. உலகெங்கும் உள்ள மக்கள் மரியாவுக்கும் அந்த நிறுவனத்துக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.