திருச்சி
தீவிரவாதிகள் போல் தங்களை நடத்துவதாகத் தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்து பல மாநிலங்களில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொள்ள நாடெங்கும் இருந்து பல விவசாயிகள் செல்கின்றனர். தமிழகத்தில் திருச்சியில் இருந்து டில்லி செல்ல முயன்ற விவசாயிகள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.,
இதைக் கண்டித்து விவசாயிகள் வாயில் எலிகளைக் கவ்வி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, “நமது இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளாகிறது. ஆயினும் விவசாயிகள் இதுவரை அடிமையாகத் தான் உள்ளோம். என்னை மற்றும் விவசாயிகளை வெளியில் விட மறுக்கின்றனர். அப்படியேபோனலும் காவல்துறை வேனில் செல்லும்படி காவல்துறையினர் கட்டாயப்படுத்துகின்றனர். இந்தியா ஜனநாயக நாடா? இல்லை சர்வாதிகார நாடா?.
தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் கார்ப்பரேட்கள் கை ஓங்கும். கார்பரேட்கள் மரபணு மாற்றப்பட்ட விதை கொடுத்து உற்பத்தி செய்யச் சொல்லுவார்கள். அந்த மரபணு விதைகளால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும். மேலும் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தைத் தரமாட்டார்கள் நாங்கள் நீதிமன்றத்துக்கும் போக முடியாது.
சட்டப்படி விவசாயிகள் பிரச்சினைகளை ஆட்சியர், ஆர்டிஒ நீக்குவார்கள் என சொல்லப்படுகிறது. கரும்பு வெட்டி கொடுத்த விவசாயிகளுக்கு ஏற்கனவே பணம் தரவில்லை. இப்போது டில்லி செல்லவிடாமல் தடுத்து வீட்டுக்குள் சிறை வைத்துள்ளனர். கடந்த 23ம் தேதி 300 டிக்கெட், 4ம் தேதி 150 டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்து பணம் வீணாகிவிட்டது.
என்னைக் காஷ்மீரில் பரூக்அப்துல்லாவை வீட்டுச் சிறை வைத்ததுபோல் என்னை சிறை வைத்துள்ளார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் செல்ல உள்ளோம். எங்கள் பின்னால் வருவோம் என காவல்துறையினர் கூறி. தீவிரவாதிகளைப் போல் எங்களை நடத்துகின்றனர்.
எங்களைப் போன்ற விவசாயிகள் போராடுவது, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் சேர்த்துத்தான். ஆனால் காவல்துறையினர் எங்களைத் தடுப்பது அடிமையாக இருப்பதைக் காட்டுகிறது. சுதந்திரமாக எங்களைச் செயல்பட அனுமதிக்க வேண்டும். ” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.