சென்னை:

சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நள்ளிரவு முதல் 30ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், விதிகளை மீறுவோரை கண்காணிக்க டிரோன்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

அண்ணாசாலையில் காவல்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். அங்கு திடீரென விஜயம் செய்த மாநகர காவல் ஆணையர்  ஏ.கே. விஸ்வநாதன்  டிரோன் கண்காணிப்பு குறித்து ஆய்வு நடத்தினார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுக்க சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளுடன் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டத்தின் சில பகுதிகளில் போலீஸார் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனா். அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் பொதுமக்கள் செல்வதற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கையொட்டி சென்னையில் 288சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன , அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் மூடப்படும். பணியாளர்கள் சென்னையில் இருந்து புறநகருக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  இன்று (19.06.2020) காலை காவல்  ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன்  திருவல்லிக்கேணி, அண்ணா சாலையிலுள்ள, அண்ணா சிலை அருகே காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது,  பொதுமக்களை கண்காணிக்க  போலீசாரால் பயன்படுத்தப்படும் Drone Camera ன் இயக்கத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆணையாளர்  பிரேம் ஆனந்த் சின்ஹா, (தெற்கு), இணை ஆணையாளர் (கிழக்கு) ஆர்.சுதாகர்,  திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் ஜி. தர்மராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காவல்துறையினர், முக்கிய பகுதிகளை விடுத்து, மக்கள் நெருக்கம் பகுதிகளிலும் இதுபோல டிரோன்கள் மூலம் கணிகாணிப்பை ஏற்படுத்தி,  ஆய்வு நடத்தி, ஊரடங்கை கடுமையாக்கி நோய் தொற்று பரவலை தடுக்க வேண்டும் என  நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.