சென்னை

ஜி  (அரசு வண்டி) என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தனியார் வாகனங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.

 

மாதிரி புகைப்படம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் பகுதியில் ஒரு நபர் போலியாக காவல்துறை அதிகாரி என சொல்லி தனது வாகனத்தில் காவல்துறை என ஸ்டிக்கருடன் வலம் வந்தார்.  அவர் பிறகு கைது செய்யப்பட்டார்.  இது காவல்துறையினரிடையே புது விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

இதை போல் பலரும் ஆங்கிலத்தில் ஜி அல்லது தமிழில் அ என பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை தனியார் வண்டிகளில் ஒட்டி நடமாடி வருவது தெரிய வந்தது.   எனவே இவ்வாறு தனியார் வாகனங்களை அரசு வாகனங்கள் எனக் காட்டி ஏமாற்றுவதைத் தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர்,”அரசு வாகனங்கள் அளிக்கப்படாத பலரும் தங்களது சொந்த வாகனத்தில் தங்களது துறையின் பெயரை முன் பக்க கண்ணாடியில் பெரிய எழுத்துக்களில் ஒட்டை வைக்கின்றனர்.  மேலும் தங்கள் வீடுகளின் அக்கம் பக்கம் உள்ளோரிடம் மதிப்பைப் பெற ஸ்டிக்கர்களையும் வாகனத்தில் ஒட்டுகின்றனர்.

இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் எங்காவது தவறான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தால் அபராதத்தில் இருந்து தப்பவும் இந்த முறையைக் கையாள்வதாகத் தெரிய வந்துள்ளது.  தவிரப் போக்குவரத்து விதிகளை மீறும் போதும் இதனால் தப்பி விடுவதும் நடைபெறுகிறது.  எனவே இவ்வாறு தவறாக ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கைகள் எடுக்க உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.