சென்னை,
தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. காவல் துறை மானிய கோரிக்கையின்போது காவல்துறை தலைவர் டிஜிபி , கமிஷனர் வந்தால் தான் காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசுவேன் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சட்டமன்றத்துக்கு வருகைபுரிந்தார்.
பொதுவாக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை குறித்த விவாதத்தின்போது, அந்தந்த துறை களுக்கு பொறுப்பாக உள்ள தலைமை அதிகாரிகள் சட்டமன்றத்திற்கு வருகை தந்து, சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள், குற்றச்சாட்டுக்கள் குறித்த விவாதங்களை கேட்பது வழக்கம்.
அதுபோல் இன்று நடைபெற்ற காவல்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதத்தின்போது தமிழக டிஜிபி சட்டமன்றத்திற்கு வருவதை தவிர்த்தார்.
இதையடுத்து சபையில் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், தமிழக டிஜிபி சட்டமன்றத்துக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் இருக்கும் போது டிஜிபி வரவில்லை என்பது நியாயமற்றது என்று கூறினார்.
ஆனால், காவல்துறையின் விவாதம் நடக்கும் போது டிஜிபி, கமிஷனர் இருப்பது மரபு என்றும், தமிழிக டிஜிபி, சட்டப்பேரவைக்கு வந்தால்தான் பேசுவேன் என்று துரைமுருகன் பிடிவாதமாக கூறினார்.
அதைத்தொடர்ந்து டிஜிபி டிகே ராஜேந்திரன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.