சென்னை:
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய, ஜாமினை ரத்து செய்யக்கோரி சென்னை காவல்துறை  தரப்பில் தொடரப்பட்ட  வழக்கை  சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு  கடந்த 23-ம் தேதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்  மே 31ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கியது.
இந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகும் தினத்தில், தனக்கு  ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரி ஆர்.எஸ்.பாரதி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த இரு மனுக்களும்  நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று  விசாரணைக்கு வந்தது.  அப்போது, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, இடைக்கால முன் ஜாமீனை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டார்.  மேலும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகும் தினத்தில் அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிடவும் கோரினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன்,  புகார்தாரரை விசாரிக்காமல் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளதாகவும்,  இது சட்டப்படியானது இல்லை, ஆகவே  ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும்  வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார் , ஆர்.பாரதியின் வாதத்தை ஏற்று காவல்துறை யினரின் மனுவை தள்ளுபடி செய்தார்.