கடமை தவறாதவருக்கு  கொரோனா தொற்று பரிசு..

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹெப்பகோடி காவல் நிலையத்தில் உதவி சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கடமை தவறாத அதிகாரி ஒருவர் அண்மையில் இரண்டு திருடர்களை மடக்கிப் பிடித்தார்.

அங்குள்ள கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான காலிமனையில் போடப்பட்டிருந்த இரும்பு தடிகளை, இரு திருடர்களும் எடுத்துச் சென்றபோது, அந்த அதிகாரியிடம் பிடிபட்டனர்.

இருவரும் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக, வழக்கமான கொரொனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், ஹெப்பகோடி காவல்நிலையம் அதிர்ந்து போனது.

 ஏன்?

பிடிபட்ட இரு திருடர்களும் , ஜெயிலில் அடைக்கப்படுவதற்கு முன்னர் அந்த காவல் நிலையத்தில் வைத்துத்தான் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், அந்த ஸ்டேஷனில் வேலைபார்க்கும் 20 போலீசாருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

திருடர்களை பிடித்த காவல் அதிகாரிக்கு ( உதவி சப்-இன்ஸ்பெக்டர்) கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதிகாரியால் சிறை பிடிக்கப்பட்ட திருடர்களிடம் இருந்து, கொரோனா தொற்று, அவருக்கும் தொற்றி இருந்தது.  அவர் உடனடியாக சிறப்பு முகாமில் தனிமை படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனா பாதித்த திருடர்களை பிடிக்கப்போய், அவர்களிடம் இருந்து , காவல்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று பாய்ந்திருப்பது பெங்களூரு போலீசாரிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இனிமேல் கிரிமினல்களை கைது செய்வதா? அல்லது கொஞ்சகாலம் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதா? என அவர்கள் ஒருவருக்கொருவர் விவாதம் நடத்திய வண்ணம் உள்ளனர்

– ஏழுமலை வெங்கடேசசன்